தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 49:5
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
யாக்கோபு- இஸ்ரவேலாக மாறுதல்( திருஷ்டாந்தம் )
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,யாக்கோபை கர்த்தர் லாபானுடைய கையிலிருந்து விடுதலையாக்கினதை பார்க்க முடிகிறது. அவன் கழிந்த நாளில் நாம் பார்த்த பகுதியில் மலையில் இராத்தங்கி தன் சகோதரர்களோடு போஜனம் பண்ணி, பின்பு பிரயாணம் பண்ணுகிறான். பிரயாணம் பண்ணுவது எங்கே என்றால் தன் இனத்தாராகிய சொந்த தேசத்திற்கு, பிரயாணம் பண்ணுகையில் தேவ தூதர்கள் அவனை சந்தித்தார்கள். யாக்கோபு அதை கண்ட போது இது தேவனுடைய சேனை என்று சொல்லி அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். அவன் திரும்பி தன் பிதாக்களின் தேசத்திற்கு போகும் போது யாரை கண்டு பயப்பட்டு அவன் தாய் ரெபெக்காள் அவனை அனுப்பிவிட்டாளோ இருபது வருடம் கழித்து திரும்பும் போதும் ஏசாவின் நினைப்பு அவன் உள்ளத்தில் வந்து ஏசாவினிடத்தில் ஆட்களை அனுப்பும் படியாக ஆட்களை அழைத்து தான் தங்கியிருந்த இடத்தையும் தன் காரியங்களையும் மேலும் ஏசாவின் கண்களில் தயவு கிடைக்கதக்கதாக அவனுக்கு முன்பாக அனுப்புகிறான். அவர்கள் ஏசாவினிடத்தில் போய் திரும்பி வந்து யாக்கோபிடத்தில் சொல்கிறார்கள்.நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்தில் போய் வந்தோம் அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
உடனே யாக்கோபு மிகவும் பயந்து வியாகுலப்பட்டு தன்னிடத்திலிருந்த ஜனங்களையும்,ஆடு மாடுகளையும், ஒட்டகங்களையும் இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு வேளை ஏசா ஒரு பகுதியின் மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும் மற்ற பகுதி தப்பித்துக் கொள்ள இடம் உண்டு என்றான்.
ஆதியாகமம் 32:9 -12
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று நான் அவனுக்குப் பயந்திருக்கிறேன்.
தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.
நாம் வேத வசனம் தியானிக்கும்போது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு தேவன் வாக்குத்தத்தம் ஒரே போல் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. அவர் வாக்கில் வல்லவர், வாக்குதத்தத்தில் மாறாதவர்.
ஆனால் யாக்கோபுக்கு ஒரு பயம் தன்னை நெருக்கியது காரணம் என்னவென்றால் அவனுக்குள் இரட்சிப்பு இல்லாததால், தேவன் அவனை எவ்வளவோ விசேஷமாக நடத்தி வருகிறார் ஆனால் அதை அவனால் உணரமுடியவில்லை. இப்படி தான் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைப்போம், சொல்லுவோம், ஆனால் நமக்குள் இரட்சிப்பு இல்லை. காரணம் என்னவென்றால் நம்மளில் முழு மாம்சமும் அழியவில்லை. அப்படி தான் யாக்கோபை தேவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.ஏசாவை பற்றிய பயம் அவனை விட்டு மாறவில்லை. ஆனால் ஏசாவுடைய இருதயத்தில் இருந்த யாக்கோபிடத்தில் உள்ள கோபம் மாறியதை யாக்கோபு உணராமற் இருக்கிறான்.
இவ்விதமாக தான் நாமும் வாழ்நாள் முழுவதும் நம் நன்மைகளை இழந்துவிடுகிறவர்களாக இருக்கிறோம்.
நாம் ஓன்று சிந்திக்க வேண்டும் கர்த்தர் நம்மை இவ்வுலக பாடு, துன்பம், வியாதி, நெருக்கம், பட்டினி, கவலை இவையெல்லாவற்றிலுமிருந்து நம்மை விடுவித்து இரட்சித்து காக்கும் படியாக தன் சொந்த குமாரனை நமக்கு தந்து, நம்மை அவருடைய இரத்தத்தால் மீட்டு இரட்சித்து, கிறிஸ்துவின் வசனமாகிய கோட்டைக்குள் நம்மை பாதுகாத்து வருகிறார் என்று நமக்கு ஒரு முழு நிச்சய நம்பிக்கை இருக்குமானால் நம்மை ஒன்றும் சேதப்படுத்துவதில்லை.
ஆனால், யாக்கோபு ஏசாவை கண்டு பயந்து தன்னிடத்திலிருந்த ஜனங்கள் மற்றும் ஒட்டகங்கள், ஆடு மாடுகள் யாவையும் இரண்டாக பிரித்து விடுகிறான். யாக்கோபு நினைக்கிறான் ஏசா பகுதி மேல் விழுந்து முறியடித்தால் பகுதி மீதியாக இருக்கும் என்று நினைக்கிறான். ஆனால், நம்முடைய தேவனோ தம்மிடத்தில் வருகிற யாரையும் அவர் வெறுமே தள்ளுவதில்லை.
சங்கீதம் 145:17- 19
கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இன்றைக்கு நம் வாழ்க்கையில் நமக்கு நம் பிராணனை பற்றிய ஒரு பயமோ, மற்றும் துன்பமோ, மேலும் மற்றவர்கள் நம்மை சேதப்படுத்துவார்களோ என்று நம் உள்ளம் பல வகைகளில் பயப்பட்டு கொண்டுயிருப்பீர்களானால் நாம் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நாம் கர்த்தரை நோக்கி மட்டும் கூப்பிட்டால் போதும் கர்த்தர் எல்லா தீங்கிலிருந்தும் நம்மை நிச்சயமாய் விடுவிப்பார்.
யாக்கோபு வாக்குதத்தம் இருந்தும் அவன் பயப்படுகிறான். அதுதான் தேவன் யாக்கோபே, நீ பயப்படாதே என்று சொல்கிறார். அன்பானவர்களே, நமக்கு இனி பயம் தேவையில்லை பயப்படக்கூடாதபடி, கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.
யாக்கோபு ஏசாவின் முகத்திற்கு பயந்து வெகுமதிகளை முன்பாக அனுப்பிவிடுகிறான், காரணமென்னவென்றால் ஏசா யாக்கோபிடத்தில் தயவாயிருக்கும்படி அப்படி செய்தான்.
ஆனால் யாக்கோபு,
ஆதியாகமம் 32:22
இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
யாக்கோபு தனித்திருக்கும்போது ஒரு புருஷன் பொழுது முடியுமளவும் அவனுடனே போராடி,
ஆதியாகமம் 32:25-32
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.
இவையெல்லாவற்றிக்கும் பிறகு தான் தேவன் யாக்கோபை, ஏசாவை சந்திக்க வைக்கிறார். யாக்கோபின் பணிவிடைகாரிகளும் பிள்ளைகளும் ஏசாவை வணங்குகிறார்கள், லேயாளும் பிள்ளைகளும் சேர்ந்து வணங்குகிறார்கள், ராகேலும் யோசேப்பும் சேர்ந்து வந்து வணங்குகிறார்கள்.
பின்பு யாக்கோபு, ஏசாவிடத்தில் என் கையிலுள்ள வெகுமதியை ஏற்றுக்கொள்ளும் அப்பொழுது நீர் என்னிடத்தில் பிரியமானீர் என்று அறிவேன் என்று சொல்லி நான் உன்மைக் கண்டது தேவனுடைய முகத்தை கண்டது போல இருக்கிறது என்று சொல்கிறான்.
ஏசாவுக்கும் வேண்டிய மட்டும் அவனுக்கு உண்டு என்று வேத வசனத்தில் வாசிக்க முடிகிறது. ஆனால் யாக்கோபு சொல்கிறான் எனக்கு வேண்டியதெல்லாம் உண்டு. ஆனால் உமக்கு கொண்டு வந்த காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று வருந்திக் கேட்டுக்கொண்டான். அப்போது ஏசா அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷத்தோடே இருவரும் அவரவர் வழியிலே பிரிந்து செல்கிறார்கள்.
ஏசா, வழியில் யாக்கோபுக்கு எதிர்ப்படும் முன்னே கர்த்தர் அவனை சோதித்து அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயரிடுகிறார் இவ்விதமாக நாம் இஸ்ரவேல் என்று அழைக்கப்படவேண்டுமானால் தேவன் நமக்கு முன் வைத்த சோதனையை எல்லாம் மேற்கொள்ள வேண்டும். ஜெபிப்போம்.(06.06.2020 -ம் நாள் தேவ செய்தியை வாசியுங்கள்).
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.