தேவனுக்கு  மகிமையுண்டாவதாக

ஏசாயா 27:6

யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.அல்லேலூயா.

 யாக்கோபின் மீட்பை பற்றியதான திருஷ்டாந்தங்கள்:

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, யாக்கோபு லாபானினால் சிறைப்படுத்தப்பட்டதை பார்க்கிறோம். எப்படியெனில்

ஆதியாகமம் 30:26-28

நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.

அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.

உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.

இப்படித்தான் நம்மிலும் அநேகம் பேர் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தேவசித்தம் கேட்காமல்  தேவனுடைய வேலை செய்ய முன் வந்து விடுகிறோம். எந்த இடத்தில் கர்த்தருக்காய் எந்த வேலை செய்யவேண்டும் என்று சிந்திக்காமல் செயல்படுகிறோம். அப்படி நாம் செய்வதினால் நமக்கு வேதனையான காரியங்களை நாம் சந்திக்க வேண்டியது வரும் காரணமென்னவென்றால் நமக்குள் உலகத்தின் ஆவி இருக்கிறதினால் தேவ சித்தம் செய்ய மாட்டோம் இப்படியிருக்கிற படியால்  நாம் சிறைப்பட்டு போகிறோம் தேவன் சிறைப்படுத்தி விடுகிறார்.

யாக்கோபு சொல்கிறான், 

ஆதியாகமம் 30:32

நான் இன்றைக்குப் போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

இவ்விதமாக யாக்கோபு கேட்க லாபான் அதற்கு செவி கொடுத்து,

ஆதியாகமம் 30:35-36

அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,

தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்று நாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.

பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, அர்மோன்,வாதுமை என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி,அதன் பட்டையை உரித்து அது வெண்மை தோன்றும்படி செய்து அதனை ஆடுகள் தண்ணீர் குடிக்க கால்வாய்களில் வரும்போது பொலிவதினால் அதில் போட்டு வைப்பான்.

ஆடுகள் அந்த கொப்புகளுக்கு முன்பாக பொலிந்தபடியினால் அது கலப்பு நிறமுள்ளதும், புள்ளியுள்ளதும்,வரியுள்ளதுமான  குட்டிகளைப் போட்டது.

அப்பொழுது யாக்கோபு அந்த ஆடுகளை பிரித்து  லாபானின் ஆடுகளுக்கு எதிராக நிறுத்தி, லாபானுடைய ஆடுகளோடே சேர்க்காமல் தனியை நிறுத்தி வைப்பான்.

இவ்விதமாக புன்னை, அர்மோன்,வாதுமை மரங்களின் கொப்புகள் தேவனுடைய வசனம் (கிறிஸ்துவின் உபதேசம்) த்திற்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவைகள் பலமுள்ள ஆடுகளாகவும் தேவனுடைய. வசனத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் விசுவாசத்தில் பலமுள்ளவர்கள் என்பதையும்,தேவனுடைய வசனம் ஏற்றுக்கொள்ளாதவர்கள் விசுவாசத்தில் பலவீனர்களாகவும் தேவன் யாக்கோபையும் லாபானையும் வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

ஆதலால் ,எல்லோரும் ஒரே சந்ததி ஆக வேண்டும் என்பதற்காக விசுவாச பலமுள்ளவர்கள் விசுவாச பலவீனங்களை தாங்க வேண்டும் இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருபோதும் சம்பாத்தியங்களுக்காக தேவ தரிசனங்களை இழந்துவிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தர் யாக்கோபோடே இருந்ததினால் சொந்த தேசத்திற்கு போகும்படி கட்டளையிடுகிறார் நாம் எப்போதும் நம் சொந்த தேசமாகிய இஸ்ரவேல் தேசத்தை விட்டு நம் உள்ளம் எங்கும் சுற்றித் திரியக்கூடாது. என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எப்படியெனில் நாம் இரட்சிப்பின் சந்தோஷத்தை தேவன் நமக்குத் தந்து நம்மை தேவனுடைய வீடாக நம்மை ஆசீர்வதித்த பிறகு அந்த வீட்டில் எப்போதும் தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். மற்றபடி நம் மனதும், மாம்சமும் விரும்புகிறதை செய்யாமல் இருக்கவேண்டும் என்பதை நாம் நன்றாக உணர்ந்து நம் இருதயத்தை தேவனுக்குள் திடப்படுத்த வேண்டும்.

தேவன் யாக்கோபிடத்தில் உன் இனத்தாரிடத்திற்கும், உன் பிதாக்களின் தேசத்திற்கும் திரும்பிப்போ என்று சொன்னதினால்,

ஆதியாகமம் 31:17- 20

அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,

தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

இவ்விதமாகயாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.

லாபான் அவன் தன் சகோதரரை கூட்டிக்கொண்டு ஏழு நாள் பிரயாண பரியந்தம் அவனை தொடர்ந்து போய், கீலேயாத் மலையிலே அவனை கண்டு பிடித்தான்.

ஆதியாகமம் 31:24

அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.

லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்.யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தை போட்டிருந்தான்.லாபானும் தன் சகோதாரருடனே கூடாரம் போட்டிருந்தான்.

இவற்றிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் கர்த்தர் யாக்கோபோடே கூட இருந்ததினால் யாக்கோபை எல்லா இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறார். சத்துரு பின் தொடர்ந்தாலும் சத்துருவின் கைக்கு தேவன் ஒப்புக்கொடுக்கவில்லை. ராகேல்  திருடிக் கொண்டு வந்ததையும் தேவன் காண்பித்து கொடுக்கவில்லை. எல்லாவிதத்திலும் தேவன் யாக்கோபோடே இருந்தார். மேலும் அடுத்த காரியங்களை நாளை தியானிப்போம் .       ஜெபிப்போம்.   

கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.