தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எசேக்கியேல் 47:9
சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும், இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும், இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.
நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்று - விளக்கம்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய ஆத்துமா மண்ணோடு மண்ணு ஒட்டாத படி எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சில கருத்துக்கள் நாம் தியானித்தோம். நம் வாழ்வில் சத்துருவானவன் தந்திரமாய் பதுங்கி நம் உள்ளத்தில் பல பொல்லாப்பான காரியங்களை செய்ய வைத்தும் நினைக்க வைத்தும் பெலிஸ்தன் ஆகிய விருத்தசேதனம் இல்லாதவன் கையிலே விழுந்து விடும் படியாக, விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தனுடைய கிரியைகளை செய்ய வைத்து விடுவான். நம்முடைய நித்திய ஜீவன் கெட்டுப்போவதற்கு அது காரணமாகி விடும். ஆனால், ஈசாக்கு தேவனுக்குக் கீழ்ப்படிந்து தேவன் சொன்ன பிரகாரம்
ஆதியாகமம் 26:17-19
அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்தான்.
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.
பழைய ஏற்பாட்டின் பகுதி நாம் வாசிக்கும்போது துரவு என்னப்பட்ட நீரூற்று தேவனுடைய சபைக்கு, தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இந்நாட்களில் அந்த ஊற்று தான் நித்திய ஜீவ ஊற்றாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ;ஜீவ தண்ணீராகிய நித்திய ஜீவ வசனங்கள் நம்முடைய உள்ளத்திலிருந்து புறப்படுகிறதாக தேவனுடைய வசனம் நமக்குச் சொல்லுகிறது. அதைப் பெற்றவர்கள் அதன் பிரசனத்தை நாம் நன்றாக உணரமுடிகிறது. அதுதான் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி சபையாக வெளிப்படுகிறது. மேலும் பரிசுத்தவான்கள் கூடுகிற இடம் பரிசுத்த மணவாட்டி சபை எனப் படுகிறது.
இவ்வித ஊற்றை நம் உள்ளத்தில் தேவன் தரும் போது, சத்துருவானவன் நம்மிடத்தில் போராடுவான். ஏனென்றால் ஈசாக்கின் வேலைக்காரர் வெட்டின துரவில் நீரூற்று கண்டதால் கோரரூர் மேய்ப்பர்கள் இது தங்களுடையது என்று சொல்லி வாக்குவாதம் பண்ணினார்கள், வாக்குவாதம் பண்ணினதால் அந்த துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.
பின்பு வேறொரு துரவு வெட்டினார்கள் அதிலும் வாக்குவாதம் பண்ணினதால் சித்னா என்று பேரிட்டான்.
மூன்றாவதாக அவ்விடம் விட்டுப் பெயர்ந்து வேறொரு துரவு வெட்டினான்; அதைக் குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ண வில்லை. வாக்குவாதம் பண்ணாததால் இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி ரெகோபோத் என்று பேரிட்டான். இவ்விதமாக ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று ஆபிரகாமிடத்தில் சொன்ன வாக்குதத்தத்தை நிறைவேற்ற தேவன் தொடங்குகிறார்.
ஆதியாகமம் 26:23-25
அங்கேயிருந்து பெயர்செபாவுக்குப் போனான்.
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுக்கொண்டு, அங்கே தன் கூடாரத்தை போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
இவ்விதமாக ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொன்னது சபையை பெருகப்பண்ணுகிறார்.
ஆனால் அபிமெலேக்கும், அவன் சிநேகிதனாகிய அகுசாத்னும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஈசாக்கினிடத்தில் வந்தார்கள்
ஆனால் ஈசாக்கு ஏன் என்னிடத்தில் வந்தீர்கள், நீங்கள் என்னை பகைத்து என்னை துரத்தி விட்டீர்கள் என்று சொல்ல, அவர்கள் நிச்சயமாய் கர்த்தர் உம்மோடே இருக்கிறார் என்று கண்டோம். ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாக வேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். அதனால் நாங்கள் உம்மை தொடாமல் நன்மையே செய்து சமாதானத்தோடே அணுகி விட்டது போல, நீரும் எங்களுக்கு தீமை செய்யாத படி உம்மோடே உடன்படிக்கை பண்ணிக் கொள்ள வந்தோம் நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டவராமே என்றார்கள்.
ஆதியாகமம் 26:30-33
அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
அதற்கு சேபா என்று பேரிட்டான். ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.
ஆனால் அபிமெலேக்கும் அவனுடைய சிநேகிதனும், அவன் சேனாபதியும் ஈசாக்கோடே ஆணையிட்டு கொண்ட காரணம் என்னவென்றால்
கலாத்தியர் 3:8, 9
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
அதற்கு ஆதாரமாக யோவான் 4-ம் அதிகாரம் நாம் வசிக்கும் போது யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலக்கமாட்டார்கள் என்பது தெரியவருகிறது. ஏனென்றால்
யோவான் 4:8-10
அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
அதற்கு அந்த ஸ்திரீ உம்மிடத்தில் மொண்டு கொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே என்று இயேசுவிடம் சொல்வது மாத்திரமல்ல, எங்கள் பிதாவாகிய யாக்கோபை பார்க்கிலும் நீர் பெரியவரோ, அவரும், அவர் பிள்ளைகளும், மிருகஜீவன்களும் இதில் குடித்ததுண்டே என்று அவள் சொல்லும்போது,
யோவான் 4:13, 14
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
இவ்விதமாக சமாரியாவில் தன்னை குறித்து வெளிப்படுத்துகிறார். அப்போது அந்த ஸ்திரீயினிடத்தில் பிதாவை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளும் காலம் வரும் அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மை தொழுக் கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:24
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், தேவன் ஆவியாயிருக்கிறார். அவருடைய வார்த்தை தான் குமாரனாக வெளிப்படுகிறார் என்றும், அந்த வார்த்தையானது சத்தியம் என்றும் நமக்கு தெரியவருகிறது. அவரே பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியாகவும் மணவாளனாகிய கிறிஸ்து நம்மளில் வெளிப்படும் போது நாம் மணவாட்டியாகவும், தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுத்துக் கொள்ளுவோம். இதுதான் சத்தியம் இந்த சத்தியம் நம் யாவரையும் விடுதலையாக்கும்.
ஜெபிப்போம்
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை