சேஷ்டபுத்திரபாகம் பெற்றுக்கொள்ளுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 23, 2020


கிறிஸ்துவுக்குள்  பிரியமானவர்களே!

 முந்தின நாட்களில் நாம் தியானித்து வந்த வேத பகுதிகளில் ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு  பெண் கொள்ளும்படி தன் ஊழியக்காரனை  தன் தேசத்திற்கும்,  தன் இனத்தாரிடத்திற்கும் அனுப்பினதை பார்க்கிறோம்.

அதுபோல் அந்த ஊழியக்காரனும் கீழ்ப்படிந்து தேவனிடத்தில் விண்ணப்பித்து தகுந்த  மணவாட்டியை  ஈசாக்குக்கு அழைத்துக் கொண்டு வருவதைப் பார்க்கிறோம்.   ஆனால் ஆபிரகாமிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று தேவன் சொன்னதை கர்த்தர் சாராள் பெற்ற ஈசாக்கு மூலம் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி,  ஈசாக்குடைய மனைவியாகிய  ரெபெக்காளை  அவள் குடும்பத்தார் வாழ்த்தி அனுப்புகிறதை பார்க்கிறோம்.

            சகோதரியே, நீ கோடா கோடியாய் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள்  பகைஞருடைய வாசல்களை சுதந்தரித்து கொள்வார்களாக என்று ஆசீர்வதித்து அனுப்புகிறதை பார்க்கிறோம்.

கிறிஸ்துவின் மணவாட்டி சபைகள் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்படும் என்பதையும்,  இந்த சபைகள் பகைஞருடைய வாசல்களை சுதந்தரிக்கும்  என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை எல்லாம் சுதந்தரித்ததற்கு  பிறகு ஆபிரகாம் மரிக்கிறான். அவனை மக்பேலா என்னும் குகையிலே அடக்கம்பண்ணினார்கள்.,

 ஆனால் ஆகார் ஆபிராமுக்கு பெற்ற மகன் இஸ்மவேல் நூற்று முப்பத்தேழு வயதில் பிராணன் போய் மரித்து தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

ஆனால் ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்  பண்ணும் போது அவனுக்கு நாற்பது  வயதாயிருந்தது.  அவள் பிள்ளையில்லாமல் இருந்ததால் ஈசாக்கு தன் மனைவிக்காக விண்ணப்பம் பண்ணுகிறான். தேவன் ஈசாக்கின் வேண்டுதலை கேட்டருளினார். அவன் மனைவி கர்ப்பந்தரிகிறாள்.

ஆதியாகமம் 25:22-24

அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.

பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.

இது நமக்கு தேவன் சபையை திருஷ்டாந்தபடுத்துகிறார்.  என்னவென்றால் சபைகளில் இரண்டு வித ஜனத்தார்  நிச்சயம் இருப்பார்கள்.  ஒன்று மாம்ச சிந்தை உள்ளவர்கள், மற்றொன்று ஆவிக்குரிய சிந்தை உள்ளவர்கள். மாம்ச சிந்தை மரணம்,  ஆவிக்குரிய சிந்தையோ ஜீவனும் சமாதானமும்.  அதுபோல் நம் உள்ளத்தில் இரட்டை காரியங்கள் உண்டாகும். மாம்சத்தை  கிறிஸ்துவின் ஆவியினால் நாம் அழித்து ஆவிகேற்றப்பிரகாரம் நாம் நடந்து கொள்ள வேண்டும். 

அதைத்தான்,

ரோமர் 8:13

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

ரெபெக்காள்  பெற்றெடுத்த  இரண்டு பிள்ளைகள் ஒரே கர்ப்பத்தில் வெளிப்பட்டதைப் பார்க்கிறோம்.  ஆனால் மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும்  சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்.  அவனுக்கு ஏசா  என்று பெயரிட்டார்கள்.   இரண்டு பேரும் வளர்ந்து பெரியவரானார்கள்.

இவ்விதமாக ஏசா வளர்ந்து  பெரியவனான போது வேட்டையில் வல்லவனும், வனசஞ்சாரியுமாயிருந்தான்,  ஆனால் யாக்கோபு குணசாலியும்  கூடாரவாசியுமாயிருந்தான்.

ஏசா  வேட்டையாடி கொண்டு வருவது,  தகப்பனாகிய ஈசாக்கின் வாய்க்கு ருசிகரமாயிருந்தது அதனால் ஈசாக்கு ஏசாவின்  மேல் பட்சமாயிருந்தான்.

வெளியில் போன ஏசா  களைப்போடு வருகிறான்,  அப்போது யாக்கோபு கூழ்  சமைத்துக் கொண்டிருந்தான். மேலும் யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்ததினால் தாயாகிய ரெபெக்காள் யாக்கோபின் மேல் பட்சமாயிருந்தாள்.

 ஏசா களைப்போடு வந்ததால் யாக்கோபிடம் அந்த சிவப்பான கூழிலே நான் சாப்பிட கொஞ்சம் தா,  இளைத்திருக்கிறேன் என்றான்;  இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டாயிற்று.

ஆதியாகமம் 25:31

அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.

ஆதியாகமம் 25:32-34

அதற்கு ஏசா: இதோ, நான் சகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.

அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.

அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.

இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால் யாக்கோபை குணசாலியும் கூடாரவாசியும் என்று எழுதப்பட்டிருப்பது தேவனுடைய சபைக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். ஏசா  வெளியில் போய் கொண்டு வருகிறான் என்றால் அவன் சபைக்கு புறம்பாக இருப்பதாக நமக்கு தெளிவுப்படுத்துகிறார்.  இவர்கள் இரட்டை பிள்ளைகள் ஒன்று மாம்சம்,  ஒன்று ஆவி.  தேவனுடைய ஆவியினால் மாம்ச சிந்தையை  அழிக்கவேண்டும்  என்பதை தான்  யாக்கோபு தாயின் வயிற்றிலிருந்து வெளிப்படும்போது ஏசாவின் குதிங்காலை  பிடித்துக்கொண்டு வெளிப்படுகிறான்.

மாம்ச சிந்தை மரணம் என்பதை காட்டும்படியாக, ஏசா,  யாக்கோபிடத்தில் நான் சாக போகிறேன் என்று காட்டுகிறான். மாம்ச சிந்தையுள்ளவர்களுடைய ஆத்துமா சாகும்.

 மேலும் வெளியில் இருந்து வந்த ஏசா இளைப்போடு வருகிறான். இளைத்தவன் தன் சேஷ்டபுத்திரத்தை  இழந்து விடுகிறான்.  குணசாலியாக கூடாரத்தில் இருந்தவன் தன் தாயினால் தேற்றப்பட்டு சேஷ்டப்புத்திர பாகத்தை பெற்று கொள்கிறான்.

 இதிலிருந்து நாம்  எப்படியிருக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.

ஜெபிப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

 

-மேலும் தொடர்ச்சி நாளை