தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 7:4,5

இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபைகளாகிய நம்முடைய உள்ளத்தில் அந்நிய ஸ்திரீகளின் கிரியைகள் அழிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் நம்முடைய ஆத்துமாவை, பொருத்தனை அல்லது நிபந்தனைக்குட்படுத்தியிருந்தால், கர்த்தரின் சித்தப்பிரகாரம் செலுத்த தவறக்கூடாது என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிக்கப்போகிற காரியம் என்னவென்றால் 

எண்ணாகமம் 31:1- 13  

கர்த்தர் மோசேயை நோக்கி:

இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.

இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான்.

அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள்.

மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.

அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,

தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,

சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் புத்திரர் நிமித்தமாக மீதியானியரிடந்தில் பழி வாங்கும் பொருட்டு, உங்களில் அவர்கள் மேல் யுத்தத்திற்கு போக தக்கதாக மனிதரை பிரித்தெடுங்கள் என்றார். ஆனால் மோசே  இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலும்  ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம் பேரை யுத்தத்திற்கு அனுப்ப வேண்டும் என்றான்.  அவ்விதம் பன்னிரண்டு கோத்திரங்களில், பன்னீராயிரம் பேர் யுத்தசன்னதராய் நிற்த்தப்பட்டார்கள்.   மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில் அவனுடைய கையில் பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் அனுப்பினான். கர்த்தர் சொன்னபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம் பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுப் போட்டார்கள். 

நாம் பரிசுத்தமாக இருந்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியும்.  இதன் விளக்கம் என்னவெனில்  கழிந்த நாட்களுக்கு முன்பு நாம் தியானித்த வேதப்பகுதியில் ஒரு இஸ்ரவேலன் மீதியானிய ஸ்திரீயோடு வேசிதனத்தில் நடந்ததில் பினெகாஸ் பட்டயத்தால் கொன்றதை பார்க்கிறோம்.  இதனை கர்த்தர் திருஷடாந்தபடுத்துவதன் விளக்கம் என்னவென்றால் ஆவிக்குரிய வேசித்தனம், பிற ஸ்திரீகளோடு தொடர்பு இருக்கக்கூடாது.  அதென்னவென்றால் பரிசுத்த சபையின் அலங்காரமாக நம் உள்ளம் இருக்க வேண்டும் என்றும், உலக ஆடம்பரமான அலங்காரம் நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும், பாவம் பூரண படும் போது அது மரணத்தை பிறப்பிக்கிறது.  

ஆதலால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தவராக நம் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கிறார்.  இவ்விதமாக அந்நிய ஸ்திரீகளின் கிரியைகளை அழிக்கும் படியாக கர்த்தர் மோசேயை வைத்துத் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் ஏழு ஸ்திரீகளை குறித்து கர்த்தர் 

ஏசாயா 4:1-6 வசனங்களில் விளக்குகிறார்.  

அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.

இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.

அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,

சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.

அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.

பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

என்னவென்றால் ஏழு ஸ்திரீகளுக்கு ஒரே புருஷன்.  அவர்களுடைய கருத்துக்கள் என்னவென்றால் எல்லாரும் இயேசுவின் பெயரை மட்டும் சொல்வார்கள்.  ஆனால் கிரியைகள் அவருடையதல்லாததாயிருக்கும்.  என்னவென்றால் சொந்த ஆகாரம் புசித்து, சொந்த வஸ்திரம் உடுப்போம்  என்பார்கள்.  ஆனால் அந்த எண்ணத்திலிருந்து தப்பினவர்கள், கர்த்தரின் கிளை அவர்களுக்கு  அலங்காரமும், மகிமையுமாயிருக்கும்.  பூமியின் கனி அவர்களுக்கு சிறப்பும், அலங்காரமுமாயிருக்கும்.  அவ்விதம் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும்  எருசலேமின் இரத்தப்பழிகளை இஸ்ரவேலரிடத்திலிருந்து நீக்கும் போது, ஜீவனுக்கென்று பெயர் எழுதப்பட்டவனெவனும் பரிசுத்தன் என்று சொல்லப்படுவான் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

ஆதலால் நம் தேவன் இஸ்ரவேலராகிய நம் உள்ளத்தில் மீதியானி கிரியைகள் எழும்பக் கூடாது என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி,  மேசேயிடம் சொல்கிறார்.  கர்த்தர் சொன்னது போல் மீதியானியரை கொன்று போட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், சேபா என்பவர்களையும் கொன்றுப்போட்டார்கள்.  இது நம்முடைய உள்ளந்தில் எழுந்தருளுகிற இராட்சத ஆவிகள்.  இவ்வித ஆவிகள் சுட்டெரிப்பின் ஆவியினால் சுத்திகரிக்கப்படவேண்டும்.  

பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள். பிலேயாம் பட்டயத்தினால் மடியாமல் இருந்தால் நம் உள்ளமானது காசுக்காக அலைந்து திரியும்.  இளைப்பாறுதல் கிடைக்காது. அவர்களை குறித்து 

யூதா 1:11-13  

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்த்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்க்கூறிய  வசனங்களை தியானிக்கும் போது அப்படிப்பட்டவர்கள் மார்க்கம் தப்பி நடக்கிறவர்கள். அவர்களுக்கு என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.  ஆதலால் மீதியானியரின்  ஸ்திரீகளையும், குழந்தைகளையும் சிறைபிடித்து,அவர்களுடைய மிருக ஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவற்றையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு, ஊர்கள் கோட்டைகள் யாவையும் சுட்டெரித்து பின்பு 

எண்ணாகமம் 31:11-12  

தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,

சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் நாம் தியனிக்கும் போது மீதியானியரின் கோட்டைகள், ஊர்கள் இவைகளை மட்டும் சுட்டெரித்தார்கள்.  ஆனால் மற்றபடி ஸ்திரீகள், குழந்தைகள், மற்றும் மிருக ஜீவன்கள்  மற்றும் கொள்ளையிட்ட பொருட்களையும்,  மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலுள்ள மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திற்கும் கொண்டு வந்தார்கள். அவைகளையெல்லாம் பார்க்கும்படியாக ஆசாரியனாகிய எலெயாசாரும், சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களை சந்திக்க பாளயத்திற்கு வெளியே புறப்பட்டு போனார்கள்.  

பிரியமானவர்களே நம்முடைய உள்ளத்தில் இருக்கிற உலகமாகிய துர்கிரியைகள் எல்லாம் சுட்டெரிப்பின் ஆவியினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். அதில் எந்த காரியங்கள் எல்லாம் முழுமையாக அழிக்காமல் இருக்கிறோமா என்பதை நம்முடைய ஆசாரியராகிய கிறிஸ்து கவனித்து பார்க்கிறார். அவ்விதம் உள்ளவர்கள் பாளயத்திற்கு புறம்பே தான் காணப்படுவார்கள்  

ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய உள்ளத்திலுள்ள எல்லா துர்கிரியைகளையும் ஒழித்து விட்டு நாம் சுத்தமாகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.