தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 10:24,25

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு உகந்த ஆராதனை செய்யும் முறைகள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாக நாம் நாட்களையும், மாதங்களையும், வருஷங்களையும், இவ்வுலகத்திற்கேற்றபடி அனுசரியாமல், எல்லா நாளும் கிறிஸ்து தான் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

அல்லாமலும் இந்த நாளில் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 28:16-31  

முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.

அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.

முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.

இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.

ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.

அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

நித்திய சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது முதலாம் மாதம் பதினாலாம் தியதி கர்த்தருக்குரிய பஸ்கா, அந்த மாதம் பதினைந்தாம் தியதி பண்டிகை நாள்.  இந்த பண்டிகை என்று எழுதப்பட்டிருப்பது என்னவென்றால்  நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் நாம் புதிய உடன்படிக்கை எடுக்கும் போது ஒரு புதிய சிருஷ்டியாக புதிய சாயலை தரித்திருக்கிறோம்.  அவ்விதம் புதிய சாயலாகிய தேவ சாயல் பெற்று கர்த்தரை நாம் ஆராதிக்க வேண்டும்.   அப்போது நம்முடைய பாரம்பரியம் எல்லாம் களைந்து புதிய உடன்படிக்கையை பற்றிக்கொள்கிறோம். அந்த நாளைக் குறித்து 

சங்கீதம் 97:11,12  

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள்  என்னவெனில் நாம் கர்த்தரில் அன்பு கூரும் போது, நாம் தீமையை வெறுத்து விடுகிறோம், அப்போது கர்த்தர் பரிசுத்தவான்களின் ஆத்துமாவை காப்பாற்றி துன்மார்க்கரின் கையிலிருந்து நம்மை விடுவிக்கிறார். அப்போது நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கும்.  இந்த வார்த்தையிலிருந்து அறிந்துக்கொள்ள வேண்டியது, நீதிமான் கிறிஸ்துவும், செம்மையான இருதயமாக நாம் நடந்துக்கொள்வோமானால் நமக்கு மகிழ்ச்சியும் உண்டு. அப்படிப்பட்ட வாழ்வை தந்த தேவனை நினைவு கூர்ந்து தேவனுக்கு ஆராதனை செய்வது தான் பரிசுத்த ஆராதனை செய்வது. . அந்த நாளை நினைவு கூர்ந்து தேவனை தினந்தோறும் ஆராதிப்பதும்,  பரிசுத்தத்தை நினைவு கூர்ந்து ஆராதிப்பது தான் பரிசுத்தத்தின் நினைவுகூருதலை கொண்டாடுதல் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

அடுத்ததாக ஏழு நாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்க வேண்டும். புளிப்பில்லாத அப்பம் புசிக்க வேண்டும் என்பது, கிறிஸ்துவின் ஜீவ வசனம் தான் ஜீவ அப்பம். ஒரு ஆத்துமா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு தொடர்ந்து ஏழு நாளளவும், புளிப்பில்லா அப்பம் புசித்தபின்பு, முதலாம் நாளிலே சபை கூடுகல் இருக்க வேண்டும்;  அன்றைய தினம் சாதாரணமான யாதொரு வேலை செய்யலாகாது என்கிறார்.  

அப்பொழுது கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாகவும், பாவ நிவிர்த்திக்கென்று பாவ நிவாரண  பலியாகவும், நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுமையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.  மேலும் காலையிலே தினமும் நம்மை ஒப்புக்கொடுப்பது போல், பாவ நிவிர்த்திக்கென்று நம்முடைய பாவத்தை அறிக்கை பண்ணி நம்முடைய ஆத்துமாவை ஒப்புக்கொடுக்க வேண்டும்.  இப்படி நாம் முதலில் சபைக்கூடுகிற நாளிலிருந்து ஏழு நாளளவும், நாடோறும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக் கடவீர்கள்.  

மேலும் இதற்கு முன்பாக நாம் தியானித்தது போல் சர்வாங்க தகனபலியையும், அதின் பானபலியையும் அன்றி மேற்க்கூறிய பலியையும் செலுத்த வேண்டும.  அதெப்படியெனில் நாம் பாவ அறிக்கை செய்து, நம்மை தாழ்த்தி, கர்த்தருக்காய் முழுமையும் ஒப்புக்கொடுத்து, பின் கர்த்தருடைய வசனம் ஆராய்ந்து அதற்கு உள்ளம் உடைந்து ஒப்புக்கொடுக்கும் போது, அதிலிருந்து ரசம் பானபலிக்காக வார்க்கப்பட்டு, பின் அந்த வசனம் போஜனபலியாக உட்கொண்டு நம் ஆத்துமா அறுவடைக்காக எல்லா நாட்களும் காலையிலும், மாலையிலும் ஆராதனை செய்து தேவனை அனுதினம் மகிமைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.  

ஆனால் தேவனிடத்தில் நாம் குற்றமற்றவர்களாக காணப்படவேண்டும். அப்போது கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டு நித்திய பாதையில், சத்திய வழியில் நடத்திசென்று நித்திய ஜீவனை தந்தருளுவார் பிரியமானவர்களே யாவரும் நாம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.