தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 14: 5

அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், நாட்களையும், காலங்களையும், மாதங்களையும்  வருஷங்களையும், இவ்வுலகத்திற்கேற்ற வழக்கத்தின்படி அனுசரியாமல் எல்லா நாட்களுமே கிறிஸ்து தான் என்ற எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தினந்தோறும் முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்.  மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய உள்ளத்தில் வாசம் பண்ணுகிறதினால், நாம் எல்லா நாளும் பரிசுத்த நாளாக ஆசரிக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 28:11-15  

உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.

போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷமுழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.

நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் பழைய ஏற்ப்பாட்டின் காலத்தில் மாதப்பிறப்பு ஆராதனை செய்யும் படியாக கர்த்தர் சொன்னது என்னவென்றால்; கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்த கடவீர்கள் என்றார்.  மாத பிறப்பு ஆராதனை என்பது மிகுந்த பெலன் அடைந்து தேவனை ஆராதிக்க வேண்டும் என்றும் போஜனபலியாக  ஒவ்வொரு காளைக்கு பத்தில் மூன்று பங்கானதும், எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜன பலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும், எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் போஜன பலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கு பத்தில் ஒரு பங்கானதும், எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகக் செலுத்த கடவீர்கள் என்கிறார் என்றால்;

இவை எதற்கு திருஷ்டாந்தம் என்னவென்றால்: நம்முடைய ஆத்துமா பெலனடைந்து, அபிஷேகம் பெற்று, தேவனுடைய சத்தியத்தில் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதனை காட்டுகிறார்.  ஆனால் அதன் கிருபைகள் பெற்றுக்கொள்வதனை குறித்து கர்த்தர் சொல்வது பானபலிகள் முதலாவது காளைக்கு திராட்ச ரசத்தில் அரைப்படியும், ஆட்டுகடாவுக்கு படியில் மூன்றில் ஒரு பங்கும் ஆட்டுக்குட்டிக்கு காற்படி ரசமுமாயிருக்க வேண்டும். 

மாத பிறப்பு ஆராதனை என்பது மிகுந்த பெலன் அடைந்து தேவனை ஆராதிக்க வேண்டும் என்றும் இவையென்னவென்றால் நாம் தேவ பெலன் பெற்றுக்கொள்வதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  அல்லாமலும் நாம் உதடுகளின் காளையாகிய ஸ்தோத்திரப்பலியை கிறிஸ்து மூலமாய் நாம் எப்போதும் தேவனுக்கு செலுத்தும் போது, அந்த பலியானது கர்த்தருக்கு செலுத்தும் போது பழுதற்றதாக இருக்க வேண்டும்.  நம்முடைய உள்ளத்தை நாம் அனுதினம் சுத்தம் செய்து தேவ வசனத்தினாலும், தேவ ஆவியினாலும் கழுவி சுத்தம் செய்யும் போது, நமக்கு அதிகமான தேவ பெலன் கிடைக்கும்.  நாம் அவரவருக்கு கர்த்தர் பகிர்ந்தளித்த கிருபையாகிய பெலனோடே தேவனை ஆராதிக்க வேண்டும். இது வருஷ முழுவதும், மாதந்தோறு செலுத்தபடவேண்டிய சர்வாங்க தகன பலியானால் மேலே கூறப்பட்ட விளக்கங்களின் படி  எல்லா நாளும் கர்த்தருக்குரிய நாளாக, நாம் தேவனை ஆராதிக்க வேண்டும்.  அல்லாமலும் நித்தமும் இடப்படும் சர்வாங்க தகன பலியும் அதின் பானபலியும் அன்றி, பாவ நிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டு கடாவும் செலுத்தப்பட வேண்டும்.  

பிரியமானவர்களே கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்கிறது என்றால் 

கலாத்தியர 4:11  

நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்கும் போது நாம் கிறிஸ்துவாகிய ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் மீண்டெடுக்கப்பட்டு கிறிஸ்துவின் சுதந்தரராகும் வரையிலும் நாம் எல்லா காரியத்திலும் அடிமைப்பட்டு இருந்தோம். ஆனால் காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும், நியாயப்பிரமாணத்திற்கு கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். அல்லாமலும் நாம் இப்போது புத்திரராயிருக்கிறபடியால், அப்பா பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தம்முடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.  

ஆகையால் இனி அடிமைகளாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; என்றும் நாம் புத்திரனேயானால் கிறிஸ்து மூலம் உடன் சுதந்தரராயிருக்கிறோம்.  ஆகையால் இப்போது நாம் பெலனற்ற நாட்களுக்கும், மாதங்களுக்கும், வருஷங்களுக்கும் அடிமைபடாமல், அவ்வித உலக வழிபாடுகளுக்கு விலகி, பெலனான கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும், எல்லாவுமாயிருக்கிறார்.  

ஆதலால் நாட்களும், மாதங்களும், வருஷங்களும் எல்லாமே கிறிஸ்து ஆனதால் எல்லா நாளும் நம் மகா பரிசுத்தருடைய நாள் என்பதனை மனதில் கொண்டு எல்லா நாளும் கர்த்தருக்குரிய நாளாக பரிசுத்தமாக ஆசரிப்போமாக.  இவ்விதம் நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.