தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 24: 53

நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிருபை பெற்றவர்களாக, கர்த்தருக்கு தினந்தோறும் காலையிலும், மாலையிலும் ஆராதனை செய்யவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எந்த இக்கட்டான தருணம் வந்தாலும் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை இழந்து விடாதபடி முடிவுபரியந்தம் காத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு உதாரணங்களோடு நாம் தியானித்தோம்.  

ஆனால் அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால்; கர்த்தர் மோசேயை நோக்கி  எனக்கு சுகந்த வாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், குறித்த காலத்தில் செலுத்தும்படிக்கு கவனமாயிருக்கும்படி இஸ்ரவேல் புத்திரரின் சபைக்கு சொல் என்கிறார்.  மேலும் அறிந்துக்கொள்ள வேண்டிய காரியங்கள் என்னவென்றால் நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை முடிவுபரியந்தம் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் கர்த்தருக்கு சுகந்த வாசனையான காணிக்கையையும் அப்பத்தையும் செலுத்த வேண்டும்.  அதெப்படியெனில், நாம் தேவ சத்தத்திற்கு கீழ்படிந்த உள்ளமாக தேவ சமூகத்தில் வரவேண்டும்.  

மேலும் கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டிய தகனபலி என்னவென்றால்; நித்திய  சர்வாங்க தகனபலியாக  நாள்தோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிட வேண்டும்.  இவை என்னவென்றால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதிலிருந்து கர்த்தருக்கு முன்பாக உண்மையும் நேர்மையுமாய்,  நடந்துக்கொள்ள வேண்டும். அப்படி சுத்தமான பழுதில்லாத ஆத்துமாவாக நம் ஆத்துமாவைக் காத்துக்கொண்டு இரட்சிப்பை சுதந்தரமாக்கி சபையோடு ஒரு வருடம் உண்மையாக நின்று கர்த்தருக்கு தினமும் செலுத்த வேண்டிய ஸ்தோத்திர பலியை செலுத்துகிறவர்களாக இருக்கவேண்டும்.  அதுமட்டுமல்ல காலையில் ஒரு வேளையும், மாலையில் ஒரு வேளையும், தினமும் தேவனுக்கு உண்மையாக ஆராதனை செலுத்தவேண்டும். 

அல்லாமலும் போஜனபலியாக  ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், இடித்து பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்த கடவீர்கள். இது சீனாய் மலையில் கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலி.  இவையென்னவென்றால் நாம் தேவனோடு கிறிஸ்து மூலம் சத்தியத்திற்கு கீழ்படிந்து, புது உடன்படிக்கை மூலம் தேவனோடு ஒப்புரவாகி ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது, நம் ஆத்துமா கிறிஸ்து அறுவடை செய்து தேவனுக்கு போஜனபலியாக ஒப்புக்கொடுத்து, நம் பாவங்களுக்காக உள்ளம் வேத வசனத்தினால் உடைந்து  அதிலிருந்து பிழிந்து வருகிற எண்ணெயாகிய அபிஷேகத்தையும், அதனோடு மெல்லிய மாவாகிய கிறிஸ்துவின் கற்பனைகளை உள்ளம் ஏற்றுக்கொண்டவர்களாக நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.  இது நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாகும்.  இவ்விதம் நாம் கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்.   

அல்லாமலும் கர்த்தருடைய கட்டளை என்னவென்றால் நாம் தினமும் இரண்டு நேரம் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு பரிசுத்த ஆராதனை செய்யவேண்டும்.  பரிசுத்த ஆராதனை என்றால் காற்படி திராட்ச ரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலியாக வார்க்கப்பட வேண்டும்.  எப்படியெனில் இந்த திராட்ச ரசமானது நாம் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்தால்,அவரும் நம்மளில் நிலைத்திருக்கிறார்.  அப்போது நம் ஆத்துமாவில் உள்ள நற்கிரியைகளினால், கிறிஸ்துவின் கிருபை பெருகுகிறது.  அது காற்படி என்று எழுதப்பட்டது என்னவென்றால்: கிறிஸ்து பூரண கிருபை உள்ளவர். ஆனால் அவரை விசுவாசிக்கிற நாமோ நான்கில் ஒரு பகுதியாகிலும் முதலில் கிருபை உடையவர்களாக இருந்து நம்முடைய ஆத்துமாவை ஒப்படைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டுவது மிகவும் முக்கியமான காரியமாகும்.  

மேலும் எண்ணாகமம் 28:9-15 

ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.

உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.

போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷமுழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.

நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.

மேற்க்கூறிய வசனங்களின் விளக்கம் என்னவெனில் ஓய்வு நாள் ஆராதனையைக் குறித்தும், தினந்தோறும் ஆராதனையை குறித்தும், மாதந்தோறு முள்ள ஆராதனை என்னவென்பதின் விளக்கம் கர்த்தருக்கு சித்தமானால் கிருபையில் அடுத்த நாளில் தியானிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.