தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 115: 12

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் வாயில் அருளிய வார்த்தைகளை மட்டும் பேசுகிறவர்களாக  இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பாவம், அக்கிரமம், இவைகளை தேவன் வெளிப்படுத்தினால், நாம் தேவனிடத்தில் ஒப்புரவாக வேண்டும் என்றும், அவ்விதம் நம்மை தாழ்த்தி ஒப்புரவாகுவோமானால் நாம் செய்ய வேண்டிய காரியங்களை கர்த்தர் நமக்கு தெரிவிக்கிறவராயிருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

ஆனால் அடுத்ததாக நாம் தியானிக்கிற கருத்து என்னவென்றால்  கர்த்தர் பிலேயாமிடம், நான் கூறும் வார்த்தைகளை கூற வேண்டும் என்றவுடனே பிலேயாம், பாலாக்குடனே கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.  அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து பிலேயாமுக்கும், அவனோடிருந்தவர்களுக்கும், அனுப்பினான். மற்றும் மறு நாள் காலேமே பாலாக், பிலேயாமை கூட்டிக்கொண்டு, அவனை பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான். பிலேயாம் ஏறின மேடு பாகாலுடையதாயிருந்தது. 

எண்ணாகமம் 23:1- 12  

பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.

பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.

பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.

தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.

கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

அவனிடத்துக்கு அவன் திரும்பிபோனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூடத் தன் சர்வாங்க தகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.

தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.

யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.

ஆனால் அவன் பாலாக்கிடம் ஏழு பலிப்பீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.  அப்படியே பாலாக் செய்தான்.  இரண்டு பேரும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுகடாவையும் பலியிட்டார்கள்.  பின்பு பிலேயாம் பாலகை நோக்கி உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய் வருகிறேன் என்றான்; கர்த்தர் வந்து என்னை சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை  உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி ஒரு மேட்டின் மேல் ஏறினான்.  

தேவன் பிலேயாமை சந்தித்தார் அப்போது அவன் கர்த்தருக்காக செய்ததை அவருக்கு அறிவிக்கிறான்.  அப்பொழுது அவர், அவன் வாயில் வாக்கு அருளி பாலாகினிடத்தில் திரும்பி போய் அறிவிக்க வேண்டியதை கூறுகிறார்.  பிலேயாம் அங்கு போகும் போது பாலாப் மோவாபுடைய சகல பிரபுக்களோடு கூட சர்வாங்க தகனபலியண்டையில் நின்றுக்கொண்டிருக்கிறான்.  

அப்போது பிலேயாம் வாக்கை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னை கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து என்னை அழைத்து வந்து எனக்காக யாக்கோபை சபிக்க வேண்டும் என்றும்: நீ  வந்து இஸ்ரவேலை வெறுத்துவிட வேண்டும் என்று சொன்னான்.  தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? அவர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? கன்மலையுச்சியிலிருந்து நான் அவனை கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்;   அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.  மேலும் யாக்கோபின் தூளை எண்ணதக்கவர் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக என்றேன்.  

அப்பொழுது பாலாக் பிலேயாமை  நோக்கி நான் சத்துருக்களை சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன், ஆனால் நீர் அவர்களை ஆசீர்வதித்தீர் என்று சொல்லும் போது பிலேயாம் கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான். 

பிரியமானவர்களே பாலாக் என்பவன் மோவாபிய ராஜா, அவன் இஸ்ரவேலை சபிப்பதே அவனுடைய நோக்கமாயிருக்கிறது.  காரணம் என்னவென்றால் இஸ்ரவேலர் ஏராளமான பேர் இருக்கிறதால், கர்த்தர் சபித்தால் இஸ்ரவேலர் வெற்றிப்பெறாமல் தோற்கடிக்கப்படுவார்கள் என்றதால் தேவனுடைய செயலை அவன் அறிந்தவனாகையால் பிலேயாமை கட்டாயத்துக்குட்படுத்தி வரவழைக்கிறான்.  ஆனால் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 

மேலும் நம் யாருடைய உள்ளத்திலேயாவது மற்றவர்களை சபிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நம் உள்ளத்தின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறதால் மோவாபின் கிரியைகள் நம்மிடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து நம்முடைய இரட்சிப்பை புதிதாக்கிக்கொள்ள வேண்டும்.  அப்போது நம் உள்ளம் தேவனால் ஆசீர்வதிக்கபட்டதாயிருக்கும்.  மற்றவர்களையும் நாம் ஆசீர்வதிக்க வேண்டிய எண்ணம் நமக்கு  வரும்.  கர்த்தர் ஆசீர்வாதம், சாபம் இரண்டும் நமக்கு முன் வைத்திருக்கிறார். தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருப்பார்கள்.  

அவ்விதமான ஆசீர்வாதத்தை நாம் யாவரும் சுதந்தரிக்க ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.