தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 கொரிந்தியர் 5: 17, 18

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பாவம்,அக்கிரமம், இவற்றினால் தேவனுக்கு மாறுபாடாக நடப்போமானால், அவரிடத்தில்  தாழ்மையோடு ஒப்புரவாகுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம் தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கபட்டவர் என்பதனை குறித்து தியானித்தோம்.  என்னவெனில் நம் ஒவ்வொருவருடய உள்ளத்திலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரிக்கப்பட்டவராக  கழுதை குட்டியின் மேல் யாத்திரை செய்யும் போது பெத்தானியாவில் வெளிப்பட்டார்  என்பதனை நாம் வாசிக்க முடிகிறது. 

அடுத்ததாக நாம் தியானிப்பது  என்னவென்றால் 

எண்ணாகமம் 22:21-41  

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.

கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.

கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.

அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.

அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.

கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான்.

பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

பிலேயாம் பாலாகுடனேகூடப் போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.

அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.

மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது பிலேயாம் கழுதையை மூன்று முறை அடித்ததும், கர்த்தர் கழுதையின் வாயை திறக்கிறார்.  ஆனால் கழுதையின் வாய் திறக்கப்பட்டபின்பு, கர்த்தர் பிலேயாமின் கண்களை திறக்கிறார். கண் திறந்த பின்பு, கர்த்தருடைய தூதனை கண்டு, அவன் முகங்குப்புற விழுந்து பணிந்துக்கொள்கிறான்.  கர்த்தருடைய தூதனானவர், பிலேயாமை நோக்கி நீ உன் கழுதையை இதனோடே மூன்று தரம் அடித்தத்தென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாகயிருக்கிறதினால், நான் உனக்கு எதிராக புறப்பட்டு வந்தேன்.  

நம்முடைய வழி கர்த்தரை விட்டு மாறுபாடாக இருந்தால் கர்த்தர் நமக்கு எதிராக வருவார். நாம் கர்த்தருடைய வழியில் நடக்க வேண்டுமானால் மாறுபாடான இருதயம் நம்மை விட்டு விலக வேண்டும்.  கண்கள்  திறக்கப்பட்ட பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி : நான் பாவஞ்செய்தேன்; நீர் வழியிலே எனக்கு எதிராக நிற்கிறதை நான் அறியாதிருந்தேன்: இப்போதும் உமது பார்வைக்கு தகாததாய் இருக்குமானால் நான் திரும்பி போய்விடுகிறேன் என்றான். இவ்விதமாக அவன் கர்த்தருடைய தூதனிடம் ஒப்புரவாகிறான்.  அவ்விதம் ஒப்புரவானதினால் கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதனோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையை மாத்திரம் நீ சொல்லகடவாய் என்றார்.  அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுகளோடேகூட போனான்.   

பிலேயாம் வருகிறதை பாலாக் கேட்ட மாத்திரத்தில் கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும்  அவனுக்கு எதிர்கொண்டு போனான்.    மற்றும் பாலாக் ஆவலோடே பிலேயாமுக்காக  காத்திருக்கும் போது; பிலேயாம் பாலாகிடத்தில் உம்மிடத்திற்கு வந்தேன்.  ஆனாலும் தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தைகளையே சொல்லுவேன் என்றான்  

பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்தாலோ, அல்லது பொருளாசையின் நிமித்தமாகவோ கர்த்தருக்கு தூரமாயிருப்போமானால் கர்த்தர் நமக்கு எதிராக இருக்கிறதை நாம் முக்கியமாக அறிந்துக்கொள்ள வேண்டும்.  அப்படி அறிந்து கொள்ளவேண்டுமானால் நம்முடைய கண்கள் திறக்கப்படவேண்டும்.  நம்முடைய கண்கள் திறக்கிறது என்றால், கிறிஸ்து நம் உள்ளத்தில் மகிமைப்படுகிறார் அதுதான் கழுதையின் மேல் ஏறுகிறவராக திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  

அவ்விதம் கிறிஸ்து மகிமைப்படுகிறாரென்றால் அவர் ஸ்தோத்தரிக்கப்படுகிறவர். இந்த உணர்வுகள் நம்மிடத்தில் வந்து கர்த்தரிடத்தில் ஒப்புரவாக வேண்டும்.  அப்படி ஒப்புரவாகினால் கர்த்தர் நம்மேல் இரங்கி நமக்கு நாம் செய்ய வேண்டிய காரியங்களை நமக்கு திரும்ப கற்றுத்தருகிறவராக காணப்படுகிறார். அப்படியாக எங்கு நம்முடைய அக்கிரமங்களை கர்த்தர்  நமக்கு உணர்த்துகிறாரோ, இப்பொழுதே கர்த்தரிடத்தில் தாழ்மைப்பட்டு, நம்மை அறிக்கை செய்து,  மன்னிப்புப்பெற்று  கர்த்தரோடு ஒப்புரவாகுவோம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.