தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 41: 13

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு தேவன் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவ சத்தம் கேட்டால் கீழ்படியும்பொருட்டு விவேகத்தை பேணிக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  ஆனால் பேயாரின் குமாரனாகிய பிலேயாம், தேவ சத்தம் கேட்டும், பாலாக் சொல்லியனுப்பிய வார்த்தைகளால் வஞ்சிக்கப்பட்டுவிட்டான் என்பதனை பார்க்கிறோம்.   அதனால் கர்த்தர் அவனிடத்தில் கோபமூண்டவராகி உருவின பட்டயத்தோடு அவன் யாத்திரை செய்த கழுதையின் முன் நின்று வழியை தடைச்செய்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

இப்படி தான் நாம் தேவ ஆலோசனை பெற்றிருக்கும் போது மற்றவர்கள் நம்முடைய உள்ளம் இச்சையினால் இழுக்கப்படும்படியாக வார்த்தைகளினால், நாம் கேட்ட தேவ சத்தத்தை மறந்துவிட செய்கிறதினால் தேவனை விட்டு தூரமாகி விடுகிறோம்.  அதனால் தேவகோபம் நம்மில் இருக்கிறதை நாம் தெரியாதவர்களாகவும், எங்கு கர்த்தர் நின்று நம்மை எச்சரிகிறார் என்பதை தெரியாதவர்களாவும், வழியை விட்டு வயலில் ஒதுங்கின கழுதையை பிலேயாம் அடிக்கிறது போல நாமும் தேவனுடைய வார்த்தைகளை அசட்டைபண்ணுகிறவர்களாகவும் இருக்கிறோம்.  

என்னவெனில் கழுதை வயலில் ஒதுங்குகிற காரணம் உருவின பட்டயத்தோடு நின்ற கர்த்தருடைய தூதனை கழுதை காண்கிறது.  ஆனால் பிலேயாம் காணவில்லை; காரணம் அவனுடைய கண்கள் திறக்கப்படவில்லை.  அதனால் கர்ததர் சொல்கிறார் 

ஏசாயா 42:17-20

சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.

என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?

நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும்  போது அநேக கர்த்தரின் தாசன்மார்களின் கண்கள் குருடாகயிருக்கிறார்கள் என்றும் அதனால் அவர்கள் கண்டிருந்தும் கவனியாதே போகிறார்கள் என்று சொல்கிறார்.  அல்லாமலும் கழுதை வயலில் இறங்கினது என்னவென்றால் நம்முடைய விசுவாச ஜீவிதத்தில் நாம் ஒருமுறை அவருடைய வார்த்தையை அசட்டைப்பண்ணி விட்டால் பின்பு நாம் தேவனால் எச்சரிக்கப்பட்டால், அந்த எச்சரிப்பின் சத்தத்திற்கு கீழ்படிந்து,  நம்முடைய தப்பிதங்ளுக்காக கர்த்தரின் வயலாகிய,  கர்த்தரின் சபைக்குட்பட்டு அவர் பாதத்தில் தாழ்மைப்பட்டு, நம்முடைய குறைகளை அறிக்கைச்செய்து பாவமன்னிப்புப் பெற்று, நம்முடைய ஆத்துமாவில், புதுபெலன் பெற வேண்டும் என்பது தான் தேவன் நமக்கு வைத்திருக்கிற கட்டளை.  

ஆனால் பிலேயாமுடைய கண்கள் அடைக்கப்பட்டிருந்ததால்  கர்த்தருடைய தூதனை அவனால் காணமுடியவில்லை.  அதனால் 

எண்ணாகமம் 22: 24-  31

கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.

கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.

கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.

அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தருடைய தூதனை கழுதை கண்டு சுவர் ஓரமாக ஒதுங்கி, பிலேயாமுடைய கால்களை சுவரோடே ஒதுக்கிற்று; அப்போது திரும்பவும் அதை அடித்தான்.  பின்பு கர்த்தருடைய தூதன் அப்புறம் வலது புறம், இடது புறம் விலக வழியில்லாமல் இடுக்கமான இடத்தில் நின்றார்.  அப்போது கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு  பிலேயாமின் கீழ் படுத்துக்கொண்டது.  பிலேயாம் கோபத்தினால் கழுதையை தடியினால் அடித்தான்.  

கர்த்தர் கழுதையின் வாயை திறந்தார்:  அப்போது அது தன் வாயை திறந்து நீர் என்னை இப்போது மூன்று தரம் அடிக்க நான் உமக்கு என்ன செய்தேன் என்று கேட்க, பிலேயாம் கழுதையை பார்த்து நீ என்னை பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில்  ஒரு பட்டயம் இருந்தால் இப்பொழுதே உன்னை குத்தி கொன்றுப்போடுவேன் என்றான்.  அப்பொழுது கழுதை பிலேயாமை நோக்கி; நீர் என்னை கைக்கொண்ட நாள் முதல் நீர் ஏறின கழுதை நானல்லவா?  எப்பொழுதாவது நான் இப்படி உமக்கு செய்தது உண்டா என்றது, அதற்கு அவன் இல்லை என்ற போது கர்த்தர் பிலேயாமின் கண்களை திறந்தார்.  அப்போது தான் அவன் வழியிலே உருவின பட்டயத்தோடு நின்ற கர்ததருடைய தூதனைக் கண்டு, முகங்குப்புற விழுந்து பணிந்துக்கொண்டான்.  

பிரியமானவர்களே இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் இப்படி நம்முடைய வாழ்விலும் விசுவாச ஜீவிதம் செய்யும் போது எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் நெருங்கின வாழ்க்கை வந்ததை யாவரும் சிந்திக்க வேண்டும்.  என்னவென்றால் எல்லா நெருக்கமும் சத்துரு தருவதல்ல,  கர்த்தரும் நெருக்குகிறார் என்ற உணர்வு வேண்டும். 

பிரியமானவர்களே கர்த்தரின் தாசன் அல்லது கர்த்தரின் ஊழியக்காரரின் கண்கள் குருடாக இருந்ததினால் கர்த்தருடைய தூதன் நிற்கிறதை பிலேயாமால் பார்க்கமுடியவில்லை.  அதனால் அவன் கழுதையை மூன்று முறை அடிக்கிறதை பார்க்கிறோம்.  அதன் பின்பு கர்த்தர் கழுதையின் வாயைதிறக்கிறார்.  இதனை நிவிர்த்தி செய்யும் பொருட்டாகவே கர்த்தர்  கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இதனைக்குறித்து 

சகரியா 9: 9-11 

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.

உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.

இதன் கருத்துக்கள் என்னவெனில் நம்முடைய உள்ளத்தில் ராஜாவாக கிறிஸ்து வருகிறார் என்பதனையும், அங்கிருந்து நம்முடைய ஆத்துமாவிலே இரட்சிப்பை அருளுவதையும், நம்மை முழுமையும் ஆளுகை செய்து பொல்லாத கிரியைகளை அழித்து நமக்கு சமாதானம் நல்குவதையும் தெளிவுப்படுத்துகிறது.     அல்லாமலும் கர்த்தர் அதனை எப்படி நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறாரென்றால் 

மாற்கு 11:1-10  

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்.

ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.

அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.

இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.

அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.

அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.

முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

மேற்கூறிய வசனங்கள் நம்முடைய உள்ளான ஆத்துமாவில் தேவன் நமக்கு தருகிற ஆசீர்வாதம்.  நம்முடைய தேவன் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். இவ்விதம் நம் எல்லாருடைய உள்ளமும் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்,

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.