தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 16: 5

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியத்துவ பணிவிடை செய்ய வேண்டுமானால் உலக ஆஸ்திகளில் ஆசைகொள்ளாமல் கர்த்தரே சுதந்தரம், கர்த்தரே பங்கு என்று இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் நம்மை கர்த்தருக்கு உகந்த காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்படியாகவும், இவ்விதம் ஒப்புக்கொடுப்பது கர்த்தர் நமக்கும், நமக்கு பின் வரும் நம்முடைய குமாரர், குமாரத்திகளுக்கும், நித்திய கட்டளையாக மாறாத உடன்படிக்கை உடன்படிக்கையாக ஏற்ப்படுத்துகிறார்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 18:20-32

பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.

லேவியர்மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.

அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில்  கர்த்தர் ஆரோனை நோக்கி சொல்வது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் சுதந்தரித்து கொள்ள வேண்டாம் என்றும், எப்படியெனில் கர்த்தர் மோசையை கொண்டும், அதன் பின்பு யோசுவாவை வைத்து காணியாட்சியாக நிலம் இஸ்ரவேல் புத்திரருக்கு பங்கிட்டு கொடுக்கும் போது லேவி கோத்திரத்தாருக்கு எதையும் கொடுக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.  என்னவென்றால் நானே அவர்கள் சுதந்தரம் என்று கர்த்தர் சொல்கிறதை நாம் வாசிக்க முடிகிறது.  

அதனால் கர்த்தர் ஆரோனிடம் அவர்கள் நடுவே உனக்கு பங்கு உண்டாயிருக்க வேண்டாம்.  இஸ்ரவேல் புத்திரர் நடுவே  நானே உன் பங்கும் உன் சுதந்தரம் என்று கர்த்தர் கூறுகிறார்.   மேலும் லேவியின் புத்திரர் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையை செய்கிற வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ள எல்லாவற்றிலும் தசமபாகம் அவர்களுக்கு சுதந்தரமாக கொடுக்கப்பட்டது. மற்றும் கிறிஸ்துவினால் மீண்டு எடுப்பதற்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரர் சகாதபடி அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் கிட்ட சேராதிருங்கள் என்கிறார்.  

என்னவென்றால் காணியாட்சி நிலம் அவர்களுக்கு கொடுத்ததால் அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் வேலைகளை செய்வதற்கு தகுதியில்லாதவர்கள் என்றும். மற்றும் உலக பொருட்களில் பங்கு உள்ளவர்களுக்கு பரலோகத்தில் பங்கில்லை என்பதும், அதற்காக தான் கர்த்தராகிய இயேசு தன்னை வெறுமையாக்கிக்கொண்டு இவ்வுலகத்தில் வந்து நம்மை அவ்விதம் வெறுமைப்படுத்தி இரட்சித்து எடுக்கும் படியாகவே வந்தார்.   

பின்பு மனுஷனுடைய சகல பாவம், அக்கிரமம், சாபம், இவற்றிற்காக மரித்து,  பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பெந்தேகொஸ்தே நாளில் மேல் வீட்டறையில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவர் நடுவில் இறங்கி, இப்போது நம்மிடத்தில் கிரியை செய்கிற அவருடைய வல்லமையின் படியே நம்மிடம் இறங்கியும் அவருடைய மகத்தான ஆசாரியத்துவ பணியை அவர் செய்கிறார்.  அவ்விதம் ஆசாரியத்துவ பணி செய்ய தகுதி உள்ளவர்கள் யாரென்றால் கர்த்தரே பங்கு என்று உள்ளவர்களுடைய பணி தான் கிறிஸ்துவின் பணி.  அவர்கள் உலக ஆஸ்திகளில் பங்கு வைத்திருக்கக்கூடாது. அவ்விதம்  ஆசரிப்புக்கூடார வேலையை செய்ய வேண்டும்.  அவர்கள் பிழைப்புக்காக கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் தசமபாகம் கொடுக்கப்படுகிறது.  

மேலும் அவர்கள் செய்கிற அக்கிரமம் அவர்களே சுமப்பார்கள் என்றும், இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்கு சுதந்தரம் கொடுக்கப்படுவதில்லை என்பது அவர்களுக்கு நித்திய கட்டளை என்று கூறுகிறார்.  மேலும் கர்த்தர் லேவியரோடே சொல்ல சொல்வது என்னவென்றால், இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசம பாகத்தில், பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்கு ஏறெடுத்து படைக்கும் படைப்பாக செலுத்த வேண்டும். நீங்கள் ஏறெடுத்து படைக்கும் படைப்பு களத்தின் தானியத்தை போலும், ஆலையின் ரசத்தை போலும் உங்களுக்கு எண்ணப்படும். 

மேலும் வாங்குகிற தசம பாகத்தின் ஒரு பங்கை கர்த்தருக்கென்று படைத்து அது ஆரோனுக்கு சேர வேண்டும் என்றும், உங்களுக்கு  கொடுக்கபடுகிற  ஒவ்வொரு காணிக்கையிலுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கெல்லாம் கர்த்தருக்கென்று ஏறெடுத்து படைக்கும் படைப்பாக செலுத்த வேண்டும் என்றும், அவ்விதம் படைக்கும் போது, அது களத்தின் வரத்திலும், ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்து செலுத்துவது போல் செலுத்த வேண்டும்.  அதனை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்.  அது ஆசரிப்புக்கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம் என்று சொல்கிறார். 

இவ்விதமான உச்சதமானவைகளை நாம் கர்த்தருக்கு செலுத்துவோமானால், அதினிமித்தம் பாவம் நாம் சுமக்காதபடி கர்த்தர் நமக்கு இரங்குகிறார். மேலும் நம்முடைய ஆத்துமா சாகாதபடி பரிசுத்தமானவைகளை தீட்டுபடுத்தலாகாது என்று சொல்கிறார். இதனால் தான் இவ்வித ஆராதனையில் தேவன் பிரியப்படுகிறார்.  அதனால் கிறிஸ்து அப்போஸ்தலர்களை நியமித்து, அப்போஸ்தல ஊழியத்தை ஏற்படுத்தி, அதனுள் அவர் மகிமைப்படும்படியாக எல்லாரும் தங்கள் தங்கள் ஆஸ்திகளை அப்போஸ்தலருடைய பாதத்தில் வைக்கவும் கட்டளையிட்டார்.  எல்லாரும் அவ்விதம் செய்து ஒரே போல் அனுபவித்தார்கள்.  யாருக்கும் ஒன்றும் குறைந்ததாக இல்லை. கொஞ்சம் கொண்டு வந்தவர்களும், அதிகமாக கொண்டு வந்தவர்களுக்கும் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. 

இவ்விதம் தேவனுக்கு பிரியமான ஆராதனை செலுத்தவேண்டும்.  இவ்விதம் ஆராதிக்காத அனனியா சப்பீரா அங்கு தங்கள் ஜீவனை இழந்து விடுகிறார்கள்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய வேண்டும்.  இந்நாட்களில் அநேக அந்தகனாகிய ஊழியக்காரர்கள் தங்களுக்கென்று ஆஸ்திகளை சேர்த்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் கர்த்தர்  அவருடைய வேலைக்காக கொடுக்கிற ஆசீர்வாதங்களினால் தங்களுக்கும், தங்கள் தலைமுறைகளுக்கும் ஆஸ்திகளை சேர்க்கிறார்கள். 

பிரியமானவர்களே கரத்தருடைய வசனங்களை நாம் தியானிக்கும் போது அவர்கள் உலகத்தார்கள்; பரலோக வேஷம் தரிக்கிறார்கள்.  நிச்சயமாக வேத வசனபிரகாரம் கர்த்தர் அவர்களை அங்கீகரிப்பதில்லை.  அவர்கள் அனனனியாவும், சப்பீராவும் தான்.  

ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே ஒவ்வொருவரும் மேற்கூறிய கருத்துகளை கவனமாய் தியானித்து கர்த்தருக்கு பிரியமான ஆராதனை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.