தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 7:24,25

இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய முழு இருதயம், முழு ஆத்துமா, முழு மனது, முழு பெலம் கர்த்தருக்காய் ஒப்புக்கொடுக்க வேணடும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் சுதந்தரமடைய வேண்டுமானால் நாம் நம்மை தேவனுக்கு உகந்த காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும், நாம் செலுத்துகிற காணிக்கையாகிய நம்முடைய படைப்பை கர்த்தர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆரோனாகிய ஆசாரியன் அதனை புசிக்கவேணடும் என்று திருஷ்டாந்தப்படுத்திக்கூறினதையும் தியானித்தோம். 

அடுத்தப்படியாக நாம் தியானிக்க போகிறது என்னவென்றால் 

எண்ணாகமம் 18:14-16   

இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.

மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.

மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேலிலே சாபதீடாக நேர்ந்துக்கொள்ளபட்டவைகளெல்லாம் உனக்கு உரியதாகும் என்று கர்ததர் ஆரோனிடம் சொல்வது, என்னவென்றால் நித்திய ஆசாரியராக கிறிஸ்து வெளிப்படுவார் என்றும் அவர் நம்முடைய பாவம், சாபம், அக்கிரமம் என்பவைளுக்காக அவர் பலியாகி, மற்றும் பாவம், சாபம், அக்கிரமம் என்பவைகளிலிருந்து நம்மை விடுதலையாக்கி இரட்சிக்கிறவர் என்பதனை திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார்.  

அதனை குறித்து கலாத்தியர் 3: 8-14

மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.

அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது சாபம் எவ்விதத்தில் இருக்கிறது என்பதனையும், அதனின்று ஒரு மனிதன் எவ்விதம் விடுதலை ஆகவேண்டும் என்பதையும் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவ்விதமாக தேவன் நம்மை நியாயபிரமாணத்தின் சாபத்தினின்று நீங்கலாக்கி இரட்சித்தால் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குரிய சாட்சியாக அவர் கையில் அவருடைய விருப்பமான பாத்திரமாக ஆகவேண்டும் என்பது தான் தேவ சித்தம் என்பதனை வசனங்களில் நமக்கு விளக்கிக் காட்டுகிறார். 

மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  முதற் பேறானவராக நம்மில் தோன்ற வேண்டும்.  பின்பு நம் பாவத்தால் மரித்துக் கிடந்த நம்முடைய ஆத்துமாவை அவருடைய வசனங்களினாலும், அவருடைய ஆவியினாலும் கழுவி பரிசுத்தப்படுத்தி, அவரோடுக்கூட ஆவியில் உயிர்பித்து அவரோடு நம்மையும் முதற்பலனாக மீட்டுக்கொள்கிறார்.  

அல்லாமலும் தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்றால் மீட்க வேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால்  என்று எழுதப்பட்டிருக்கிறது என்னவென்றால், கர்த்தர் நம்மை சந்திக்க வந்தும், நாம் நம்முடைய மனது விரும்புகிறது போல் அவரை அலட்சியம் செய்தால், அதன் நியமம் திரும்பி நாம் மீண்டெடுக்கபடவேண்டுமானால் நம்முடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின் படி ஐந்து சேக்கல் கணக்கோடு மீட்க வேண்டும்.  ஒரு சேக்கல் இருபது கேரா. 

பிரியமானவர்களே ஒரு முறை கர்த்தர் சந்தித்தும், மீட்கபட்டவர்கள், பரிசுத்தமாயிருப்பார்கள் என்றும் அவர்கள் திருப்பி மீட்கபடவேண்டிய அவசியமில்லை என்பதை திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் 

எண்ணாகமம் 18:17 

மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.

மேற்கூறிய பிரகாரம் அவர்கள் மீட்கபடவேண்டாம் என்றும், அவைகளின் இரத்தத்தையும், அவைகளின் கொளுப்பையும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனமாய் தகனிக்க வேண்டும்.  இதனைக்குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறிய விளக்கம் என்னவென்றால் 

யோவான்13:10, 11  

இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் ஒருமுறை கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுவிட்டால் நம்மை சுத்திகரிக்கிற விதத்தைக்குறித்துக்கூறுகிறார்.  அவ்விதம் கிறிஸ்துவுக்கு முன்பாக நம்முடைய முழு இருதயத்தையும், முழு மனதையும், முழு ஆத்துமாவையும், முழு பெலத்தையும், கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பது கர்த்தர் நமக்கும், நம்முடைய சந்ததிக்கும் தந்திருக்கிற மாறாத உடன்படிக்கையாகும்.  இவ்விதம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.