தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I பேதுரு 2: 2, 3

சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் துர்கிரியைகள் வளரவிடாமல் நம்முடைய கர்த்தர் அவருடைய அக்கினியால் சுத்திகரிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுக்கக் கூடாது என்பதும், அவ்விதம் முறுமுறுத்தவர்களாகிய கோராகு கூட்டத்தார், தாத்தான் அபிராம் என்பவர்களையும், அவர்களுக்கு உண்டானவைகள் எல்லாவற்றையும் கர்த்தர் உயிரோடே பாதாளத்தில் இறக்கினார் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக இந்நாளில் தியானிக்கிற கருத்துக்கள் என்னவெனில் 

எண்ணாகமம் 16: 35 - 37  

அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது.

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:

அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் கோராகின் கூட்டத்தார் இருநூற்று ஐம்பது பேரும் மோசே கர்த்தரின் கட்டளையின் பிரகாரம் தூபகலசத்தில் தூபவரக்கத்தை போட்டு ஆசரிப்புக்கூடார வாசலில் வந்து நின்றார்கள்.  அப்போது கர்த்தரின் மகிமை அவர்களுக்கெல்லாம் காணப்பட்டது. பின்பு மோசே கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டது போல் அவர்கள் அழிக்கப்பட்டது எப்படியென்றால் எல்லாரும் பாதாளத்தில் இறக்கப்பட்டார்கள்.  

இவற்றை கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு அடையாளமாக காட்டுகிறது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் சபையாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நாம் இணைக்கப்பட்ட பின்பு, நம்முடைய ஆத்துமாக்களின் உயிர்ப்பும், அவ்விதம்  உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாவின் கிரியைகளில், நற்கிரியைகளும், துர்கிரியைகளின் கூட்டமும் உண்டு.  இந்த துர்கிரியை என்று சொல்வது, பழைய பாவம், அக்கிரமமாகிய  மாம்ச பாரம்பரிய கிரியைகள் அழிக்கப்படாததின் காரணம் இவைகள் உள்ளத்தில் கர்ப்பந்தரித்து பெருகும்.  

அதனைக்குறித்து யாக்கோபு 1:14,15 

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

அவ்விதம் பெருகினால் நீதிமான்களின் கூட்டம் குறையும்.  இவ்விதம் பெருகுகிற துன்மார்க்கர்களின்  கூட்டத்தாராகிய கோராகின் கூட்டத்தார் உள்ளத்தில் இருப்பார்கள் என்பதையும், அவ்விதம் இருப்பதால் அநேகருடைய உள்ளமானது தேவனால் கிருபைப் பெற்ற மக்களுக்கு  விரோதமாக எழும்பும்.  அவ்விதம் எழும்பினால் தேவனுக்கு விரோதமாக எழும்புகிற செயல்கள்.  அப்படி எழும்பும் போது தேவனுடைய கோபம் பற்றியெரியும்.  அப்படியாக  அநேகருடைய ஆத்துமா மரிக்கும்.  

அல்லாமலும் நம்முடைய வாழ்க்கையில் நம் ஆத்துமாவை மாயையைக்கு ஒப்புக்கொடுக்காதபடி பாதுகாத்து கொள்ளபடவேண்டும், என்பதற்காகவே கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார்.  இப்படியாக தேவனுடைய கோபத்தினால் கர்த்தர் மோசேயினிடத்தில் அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து அவைககளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிவிடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்கு சொல்: அப்போது அந்த தூப கலசங்கள் பரிசுத்தமாயின.  

அல்லாமலும் கர்த்தர் நமக்கு அடையாளமாக காட்டுகிறது என்னவென்றால் தூபகலசமாகிய பரிசுத்தவான்களின் உள்ளம் பரிசுத்தமாக்கபடுவதற்காக கர்த்தர் சொல்லுகிறதாவது 

எண்ணாகமம் 16:38

தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.

மேற்க்கூறிய வசனம் என்ன சொல்லுகிறது என்னவென்றால் தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின  அந்த பாவிகளின் தூபகலசங்களை பலிபீடங்களை மூடதக்க தட்டையான தகடுகளால் அடிக்கக்கடவர்கள். அவைகளை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்ததினால் பரிசுத்தமாயின; இவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு அடையாளம் என்று கர்த்தர் சொல்வது என்னவென்றால் நம்முடைய உள்ளத்தில்  எழும்பி பெருகுகிற துர்கிரியையாகிய கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களின் உள்ளான கிரியைகளை அழிக்கும்படியாக கர்த்தரின் சந்நிதியில்  வரசொல்லி  அந்த துர்கிரியை செயு்யும் பொல்லாத ஆவிகளை பாதாளத்தில் இறங்க வைத்து, அக்கினியால் பட்சித்து அழிக்கிறார்.  

இவைகள் கர்த்தரின் சந்நிதியில் தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்களை  கர்த்தர் பரிசுத்தமாக்குகிறார் .  ஆனால் தேவ சத்தம் கேட்டு கீழ்படியாதவர்கள் பாதாளத்தில் கிடந்து எந்த நன்மையும் பெற்றுக்கொள்ளாமல் அக்கினியால் வேதனை அனுபவிப்பார்கள்.  

ஆதலால் பிரியமானவர்களே  இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது, நம்முடைய உள்ளத்தில் இருக்கிற குறைவுகளை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து பரிசுத்தம் பெற்றுக்கொள்வோம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.