தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 3: 14

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பாதாளத்தில் இறங்காதபடி தேவ பயத்தோடே  கர்த்தருடைய நாமத்தை தொழுதுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எந்த ஒரு காரணத்தாலோ, சபைகளில் பிரிவினை உண்டாக்காதபடி நாம் ஜாக்கிரதையாக காணப்படவேண்டும்.  அவ்விதம் உண்டாக்குகிறவர்கள் மாம்சத்திற்க்குரியவர்கள் என்றும், தேவன் அவர்கள் மேல் பிரியமாயிருப்பதில்லை என்றும், அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஐ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று நாம் தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது  

எண்ணாகமம் 16:11- 16

இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.

பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;

இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?

மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.

அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.

பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேல் புத்திரர் மோசே, ஆரோன் என்பவர்களுக்கு விரோதமாக கூட்டங்கூடினதால், மோசே அவர்களிடம் சொல்வது, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாக கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக முறுமுறுக்கிறதர்க்கு நீங்கள் எம்மாத்திரம், அவ்விதம் சொல்லிய பின் எலியாபின் குமாரராகிய தாத்தானையும், அபிராமையும் அழைத்தனுப்பினான்.  அப்போது அவர்கள் நாங்கள் வருவதில்லை, எங்களை கொன்றுபோடும்படி,  பாலும், தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களை கொண்டு வந்தது அற்ப காரியமோ?  எங்கள் மேல் துரைத்தனம் பண்ண பார்க்கிறாயோ?  என்று மோசேயை பார்த்து அவர்கள் அவதூறாக வார்த்தைகளை பேசுகிறதை பார்க்கிறோம்.  

அல்லாமலும் எகிப்தை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று அவர்கள் பேசுகிறதையும், மேலும் மோசேயைப் பார்த்து நீ எங்களைப் பாலும், தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டு வந்ததும் இல்லை, வயல்களையும், திராட்ச தோட்டங்களையும் சுதந்தரமாக கொடுத்ததும் இல்லை, இந்த ஜனங்களுடைய கண்களை பிடுங்க பார்க்கிறாயோ, நாங்கள் வருகிறதில்லை என்று சொல்கிறார்கள். 

இவ்விதமாக தாத்தான், அபிராம்  மற்றும் கோராகு கூட்டத்தாரை சத்துரு வஞ்சித்து வைத்ததை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதனால் மோசேக்கு கடுங்கொபம் மூண்டது.  அதனால் அவன் கர்த்தரிடம், அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாதிருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையையோ. மற்றும் அவர்களுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யவில்லை என்றான்.   பின்பு மோசே கோராகை நோக்கி  மறுநாளைக்கு கர்த்தரின் சந்நிதியில் அவர்களையும், ஆரோனையும்  

எண்ணாகமம் 16:17- ல் கூறியபடி வாருங்கள் என்ற சொல்ல 

உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.

எண்ணாகமம் 16:18-ன் படி 

அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.

எல்லோரும் அங்கு வந்து நின்றார்கள்.  அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கு காணப்பட்டது.  அப்போது கர்த்தர் மோசேயோடும்,ஆரோனோடும்  இந்த சபையை விட்டு பிரிந்து போங்கள் போங்கள்.  ஒரு நிமிஷத்திலே அதமாக்குவேன் என்றார்.  அப்போது அவர்கள் முகங்குப்புற விழுந்து, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவஞ் செய்திருக்க சபையார் எல்லார் மேலும் கடுங்கோபம் கொள்வாரோ என்றான்.  

அப்போது கர்த்தர் மோசேயிடம் தாத்தான், அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகி போங்கள் என்று சபையாருக்கு சொல்லுங்கள் என்றார்.  அப்படியே மோசே எழுந்திருந்து தாத்தான், அபிராம் என்பவர்களிடத்தில் போனான், அப்போது இஸ்ரவேலின் மூப்பரும் அவனை பின் சென்று போனார்கள்.  அப்போது மோசே ஜனங்களிடத்தில் எச்சரித்து இந்த துஷ்ட மனுஷரின் பாவங்களினால் நீங்கள் வாரிக்கொள்ளபடாதபடி அவர்களுடைய கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுடைய ஒன்றையும் தொடாதபடி இருங்கள் என்று சொல்ல எல்லாரும் விலகி போக, தாத்தான், அபிராம் என்பவர்கள், வெளியே வந்து தங்கள் பெண்ஜாதி பிள்ளைகளோடும், குழந்தைகளோடும், தங்கள் கூடார வாசலில் நின்றார்கள்.  

அப்போது மோசே, இந்த கிரியைகளை செய்வதற்கு கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும்,  அவைகளை என் மனதின் படியே செய்யவில்லை என்றும் எதினால் நீங்கள் அறிவீர்கள் என்று சொல்லி, கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிட செய்தால், பூமி தன் வாயை திறந்து இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கதக்கதாக இவர்களையும், இவர்களுக்கு உண்டான யாவற்றையும் விழுங்கி போட்டதானால் இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை சொல்லவும், அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது. 

மேலும் எண்ணாகமம் 16:32-34  

பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.

அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.

அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.

மேற்கூறிய வசனம் பிரகாரம் சம்பவிக்கவும, அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து, புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்து போட்டது.  பிரியமானவர்களே மேற்கூறிய பிரகாரம் கர்த்தருக்கு விரோதமாக நாம் முறுமுறுப்போமானால், நம்மையும் நமக்குள்ள யாவையும், கர்த்தர் பாதாளம் விழுங்கும் படி ஒப்புக்கொடுக்கிறார்.  

ஆதலால் நாம் எப்போதும் நம் உள்ளத்தை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கர்த்தரிடத்தில் முழு மனதோடு அன்பு கூரவேண்டும். அவ்விதம் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.