தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 105: 11

உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாசம் கானானை எளிதில் சுதந்தரித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக காணப்படவேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் திரியேக தேவன் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்பதை திருஷ்டாந்தத்தோடு இஸ்ரவேல் புத்திரரை வைத்து கானான் எப்படிபட்டதாயிருக்கிறது என்று சுற்றிப்பார்த்து வர சொன்னபோது, அவர்கள் எஸ்கோல் பள்ளதாக்கு மட்டும் போய் அங்கிருந்து ஒரு பெரிய திராட்ச குலையை ஒரு தடியில் கட்டி தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்றும், அதனோடு மாதளம் பழங்களிலும், அத்தி பழங்களிலும் சிலவற்றை கொண்டு வந்தார்கள்.  ஆனால் அங்கு ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மானும் இருந்தார்கள் என்று  எழுதப்பட்டிருக்கிறது என்று தியானித்தோம்.  

அல்லாமலும் அவர்கள் தேசத்தை சுற்றிப்பார்த்து நாற்பது நாள் கழித்து திரும்பி வந்தார்கள்.    அவர்கள் திரும்பி வரும்போது, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும், இஸ்ரவேல் புத்திரரிடத்திலும்  சேர்ந்து அங்குள்ள சமாசாரத்தை அறிவித்து, தேசத்து கனிகளை அவர்களுக்கு காண்பித்தார்கள்.  அவ்விதமாக காண்பித்து அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான் என்று அறிவிக்கிறதை பார்க்கிறோம்.  

இவை எதற்கு திருஷ்டாந்தம் என்றால், நம்முடைய உள்ளம் தான் கானான் என்பதும், அங்கு பாலும் தேனும் உண்டு என்பதையும்,  அதனுள்ளில் இருந்து கொண்டு வந்த கனி கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தினதையும், நம் உள்ளத்தில் தான் கிறிஸ்து இருக்கிறார், ஆனால் அவரை பிரகாசிக்க விடாதபடி பலவான்கள் இருக்கிறார்கள் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கி காட்டுகிறார் என்பதனை குறித்து, அவர்கள் சொல்வது அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும், மிகவும் பெரியவைகளுமாயிருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம் என்றார்கள்.  

பிரியமானவர்களே நம் எல்லாருக்குள்ளும் அவர் இருந்தவரும், இருக்கிறவரும் வருகிறவருமான சர்வ வல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று வெளி 1:8 -ல் கூறப்படுகிறது.  அது என்னவென்றால் எல்லாருடைய உள்ளத்திலும் கிறிஸ்து உண்டு.  ஆனால் அவரை பிரகாசிக்க விடாதபடி பலவான்கள் அரண் அமைத்திருக்கிறார்கள்.  அதனால் கர்த்தர் சொல்வது 

2 கொரிந்தியர் 4: 4-7

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவி கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

மேற்க்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கையில் நம்முடைய தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றபண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.  இந்த மகத்தான வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும் படி,   இந்த பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.  ஆகையால்  பிரியமானவர்களே இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் எல்லா உள்ளத்திலும் கிறிஸ்து தோன்றுவார் என்பது நிச்சயம்.  பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கையில் பாரம்பரியத்தை புறம்பே களைந்து விடும் போது தான்  உள்ளத்தில் புது வாழ்வு உண்டாகும்.  அப்படி உண்டாகவேண்டுமானால், நம் முந்தின அத்தனை மாம்ச செயல்களை விட வேண்டும்.  

அதைக்குறித்து ஏசாயா 43: 18,19  

முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது  அந்த புதிய காரியம் தான் கிறிஸ்து.  அவரை குறித்து தான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.  மேலும் இதனைக்குறித்து 

ஏசாயா 62:1-4 

சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.

ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் கர்த்தர் நம்மை நித்திய விவாகத்துக்கென்று அழைக்கிறார்.   இது தான் எகிப்தின் அடிமையிலிருந்து உள்ள மீண்டெடுப்பு.  அவ்விதமாக கானானை சுற்றி பார்க்க போனவர்களில் காலேப்  நாம் உடனே கானானை எளிதில் ஜெயித்துக்கொள்ளலாம் என்று சொல்ல அவனோடு போய் வந்த மனிதரோ  அந்த ஜனங்களோடு எதிர்க்க நம்மளால் கூடாது; அவர்கள்  நம்மை பார்க்கிலும் பலவான்கள், அது தன் தேசத்தை பட்சிக்கும் தேசம். அங்குள்ள ஆட்கள் பெரிய ஆட்கள்.   அங்கு இராட்சத பிறவியான ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுகிளிகளை போல இருந்தோம். அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தது என்று தாங்கள் சுற்றி வந்த தேசத்தை குறித்து துர்செய்தி பரப்பினார்கள்.  

பிரியமானவர்களே இவை என்னவென்றால் நம் உள்ளத்தை கிறிஸ்துவுக்கு மட்டும் சொந்தமாக்குவதன் திருஷ்டாந்தம்.  ஆனால் அநேகரால் அது முடியவில்லை; காரணம் என்னவென்றால் உள்ளத்தில் இருக்கிற பல துர் சுபாவங்கள் நம்மால் மாற்றமுடியாமல் இருக்கிறது.  

ஆதலால் பிரியமானவர்களே நம் முழு எண்ணமும் கிறிஸ்துவின் வசனமாக இருந்தால் உலகத்தை ஜெயிக்கலாம். அவ்விதம் நாம யாவரும் மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.