தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 14: 23

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் திரியேக தேவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சபையின் சகோதரருக்கு விரோதமாக எந்த காரியத்தையும் பேசக்கூடாது என்றும், அப்படி நாம் தேவனால் தெரிந்தெடுக்கபட்ட மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் கர்த்தர் நம்மை நியாயந்தீர்த்து தண்டிக்கிறதையும், அதுமட்டுமல்லாமல் விசுவாச யாத்திரையில் கர்த்தருடைய மேகம் நம்மை விட்டு மாறி போகிறதை குறித்தும் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் தியானிக்கிற பகுதி என்னவெனில் , கழிந்த நாளில் மிரியாம் கர்த்தருடைய சந்நிதியில் மீண்டும் சேர்க்கப்பட்ட பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். பாரான் வனாந்தரம் முக்கியமான வனாந்தரம் .  என்னவென்றால் அது தண்ணீர் துரவு உள்ள இடம்.  மட்டுமல்லாமல் ஆகாருடைய கண் அங்கு துறக்கப்பட்டு தூரத்திலுள்ள துரவை கண்ட இடம்.   அந்த இடத்தில் வைத்து கர்த்தர் மோசேயிடம் சொல்கிறார் 

எண்ணாகமம் 13:2,3  

நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.

மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு  கொடுக்கும் கானான் தேசத்தை சுற்றி பார்க்கும்படியாக பிதாக்களின் கோத்திரங்களின் பிரபுக்களில் ஒவ்வொரு புருஷனை அனுப்பும்படி சொல்கிறார்.  அப்போது கர்த்தரின் வார்த்தையின்படியே  மோசே இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு தலைவரை அனுப்புகிறான்.  அவ்விதமாக பன்னிரண்டு தலைவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.  மோசே தேசத்தை சுற்றிபார்க்கும்படி அனுப்பும்போது நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று பெயரிட்டான்.  

மேலும் எண்ணாகமம் 13:17-25

அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.

அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.

அவர்களை மோசே அனுப்பும் போது கொடுக்கிற கட்டளையோவென்றால் தெற்கே போய் மலையில் ஏறி, தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கேகுடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ, பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ, அநேகம் பேரோ என்றும், குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது; நல்லதோ, கெட்டதோ என்றும் அவர்கள் பட்டணங்கள் எப்படி பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறார்களோ, கோட்டைகளில் குடியிருக்கிறார்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டதென்றும், அது வளப்பமானதோ, இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ, இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டு தேசத்தின் கனிகளிலே சிலவற்றை கொண்டு வாருங்கள் என்றான்.  அக்காலம் திராட்ச செடி முதற்பழம் பழுக்குற காலமாயிருந்தது.    

அவர்கள் சீன் வனாந்தரம் தொடங்கி, ஆமாத்துக்கு போகிற வழியாக ரெகொப் மட்டும் போய் தேசத்தை சுற்றி பார்த்து, தெற்கேயும் சென்று எபிரோன் மட்டும் போனார்கள்.  ஆனால் அங்கு ஏனாக்கின் குமாரராகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள்.  எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு வருஷத்திற்கு முன்னே கட்டப்பட்டது.   இதன் பொருள் என்னவெனில் கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு கிறிஸ்துவின் ராஜ்யத்தை சுதந்தரிக்கிற விதத்தை கூறுகிறார். நம்முடைய விசுவாச யாத்திரையானது பரலோக ராஜ்யம் நமக்குள்ளில்  வந்து, அங்கு பாலும் தேனுமாகிய திரு வசனத்தால் நாம் வளர்ந்து, கிறிஸ்துவை  சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு, அவருடைய ராஜ்யத்தை நாம் சுதந்தரிக்க ஆயத்தமாகும் போது, நமக்குள்ளாக ஏற்கனவே இருந்த பாரம்பரிய இராட்சத கிரியைகளை குறித்து  ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் என்பவர்களை குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது. 

அதென்னவெனில் தேவனுடைய வாசஸ்தலமாக நாம் மாறுவதற்கு தடையாக இருக்கிற மூன்று பொல்லாத முக்கிய இராட்சத ஆவிகளை தேவன் மேற்கூறப்பட்ட மூன்று பேரை திருஷ்டாந்தபடுத்துகிறார்.  இந்த இராட்சத கிரியைகளை நம் உள்ளத்திலிருந்து விசுவாசத்தினால் மாத்திரமே அழிக்கமுடியும்.  இதனை குறித்து அடுத்த நாளில் தியானிப்போம்.  

ஆனால் எபிரோன் கட்டபட்ட பிறகு எகிப்தின் கிரியைகளுக்கு நம் உள்ளம் இடம் கொடுக்கக்கூடாது. மேலும் அவர்கள் எஸ்கோல் பள்ளதாக்கு மட்டும் போய் ஒரே குலையுள்ள திராட்ச கொடியை அறுத்து, ஒரு தடியிலே கட்டி இரண்டு பேராக கொண்டு வந்தார்கள்.  அல்லாமலும் அத்தி பழங்களிலும், மாதளம் பழங்களிலும் சிலவற்றை கொண்டு வந்தார்கள்.  அவர்கள் அந்த திராட்ச குலையை அறுத்ததினால் அந்த இடம் எஸ்கோல் பள்ளதாக்கு எண்ணப்பட்டது. அவ்விதமாக அவர்கள் சுற்றிபார்த்து  நாற்பது நாள் சென்றபின்பு திரும்பினார்கள். 

பிரியமானவர்களை கானானை சுற்றிப்பார்க் போனவர்கள் திரியேக தேவனுடைய அடையாளத்தோடு (பிதா குமாரன் பரிசுத்த ஆவி)  திரும்பி வருகிறதை பார்க்க முடிகிறது. ஏனென்றால் இஸ்ரவேலர் திரியேக தேவனுடைய நாமத்தில் கானானாகிய பரலோகத்தை சொந்த மாக்கமுடியும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

இதனை வாசிக்கிற அன்பானவர்களே இதன் கருத்துகளை கவனத்தோடு கைக்கொண்டு கர்த்தரை காணும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.