தேவனுக்கு கீழ்ப்படிதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 22, 2020


பிரியமானவர்களே,

          நீங்கள் யாவரும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாயிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நாம் யாவரும் ஒருமித்து தேவனை மகிமைப்படுத்துவோம்.

நீங்கள் யாவரும் தேவ வசனத்தை நன்றாக இந்த நாட்களில் தியானிக்கிறவர்களாக இருக்கவேண்டும். நிர்விசாரமாக யாரும் உறங்காதீர்கள். எப்பொழுதும் விழிப்போடு இருந்து ஜெபியுங்கள்.

        தேசங்களில் தேவாலயங்கள் கட்டாயமாக அடைக்கப்படவேண்டும் என கட்டளை வந்தது. பிரியமானவர்களே, தேவசெய்தியை அனுதினம் கேட்பீர்கள் என நம்புகிறேன். தேவ வசனம் படித்து தியானிக்கிறீர்கள் என நம்புகிறேன். மிகவும் விழிப்போடு இருங்கள், தேவ வசனம் காத்து நடவுங்கள், ஜெபியுங்கள். நேரம் வீணாக்காதீர்கள்.

 இப்போது தேவசபையாகிய (ஏதேன் தோட்டதுக்கு) வந்த நிலைமை என்ன? சிந்திக்கிறீர்களா?

ஆதியாகமம் 3:22-24

பின்பு தேவனாகிய கர்த்தர் : இதோ, மனுஷன் நன்மை தீமை அறியதக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான் இபபொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவெண்டும் என்று,

அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர்  அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய  ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

           இதிலிருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது என்றால் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம், ஏவாள் ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார் அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

            தோட்டத்திற்குள் சர்ப்பம் அவர்களிடத்தில் வந்து அவர்களை தந்திரமாய் வஞ்சித்தது. வஞ்சிக்கப்பட்டதின் காரணமாக தேவன் புசிக்ககூடாது என்று கட்டளையிட்ட கனியை புசிக்கும் படியாக அவர்களுடைய மனதை ஏவினது. அவர்களும் தேவனுடைய கட்டளையை மீறி சர்ப்பம் சொன்ன வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்த கனியை ஸ்திரீயானவள் பறித்து, புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.

தேவன் சொன்னது என்னவென்றால், ஆதியாகமம் 2:16,17

தேவனாகிய கர்த்தர்  மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆனால் ஆதியாகமம் 3:4,5

அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

நீங்கள் இதை புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

அதனால் ஆதியாகமம் 3:6                                        

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் அவனும் புசித்தான்.

           இப்படிதான் பிசாசானவன் தேவனுடைய தோட்டமாகிய நம்முடைய ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் வஞ்சித்து ஒவ்வொருவரும் தேவன் விலக்கி வைத்திருக்கிற காரியங்களை நம்முடைய இச்சைக்கேற்ற பிரகாரம் செய்து நாம் கொடுமையை உள்ளத்தில் குவித்து வைத்து இருப்பதால் தேவன் ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்தைவிட்டு துரத்திவிட்டது போல், நம்மை துரத்தி அவருடைய பாதுகாவலில் வைத்திருக்கிறார்.

நமக்கு என்ன தெரிய வருகிறது?

            கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, தேவன் விரும்பாத காரியங்கள் செய்தால் ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்க முடியாது. ஆனால் எல்லா தேவஜனங்களும் தங்கள் இச்சைகளுக்கேற்றபடி நடந்து கொண்டு மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டு அந்த கனியை புசிக்கிறார்கள். இந்த கனி என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமும், இரத்தமும். இந்த கனி தான் என்றென்றைக்கும் மரிக்காமல் காக்கிற கனி. இதை எல்லாரும் நிர்விசாரமாக எண்ணினதால் தேவன் தம்முடைய தோட்டத்தை அடைத்து காவல் வைத்து நம்மை (நம்முடைய ஆத்துமா மண்ணோடு மண்ணாக ஒட்டியிருப்பதால்) மண்ணை பண்படுத்த அனுப்பிவிட்டிருக்கிறார்.

ஆதியாகமம் 3:23

அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர்  அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

             ஆதாம் நம்முடைய பழைய மனுஷன். புதிய மனுஷன் நம்முடைய கர்த்தர். நம்முடைய பழைய பாவ மனுஷன் சரியாக ஒழிந்து புதிய மனுஷனை நாம் தரிக்க வேண்டும்.