தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 8: 3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினால் பாவம் கழுவி சுத்திகரிப்பு

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை, உள்ளான சரீரம் பரிசுத்தமாக காத்துக்கொள்ளாவிட்டால் உள்ளான சரீரத்தின் தோல் பாவத்தால் கறைப்பட்டு, அதிலுள்ள அழுக்குகளாய் குஷ்டமாக தோன்றும்.  இதனை காண்கிறவர் நம்முடைய ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  ஆதலால் நாம் எவ்விதத்தில் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் தியானித்தோம்.  

மேலும் லேவியராகமம் 13: 9-17

குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.

அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,

அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.

ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,

அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.

ஆனாலும், இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.

ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.

அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.

ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.

இந்த வசனங்களை தியானிக்கும் போது குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு உண்டாயிருந்தால் அவன் ஆசாரியனிடத்தில் கொண்டு வரப்படவேண்டும்.  ஆனால் இந்நாட்களில் மணவாட்டி சபை என்றால் நாம் பாவம் செய்யும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அதனை உடனே காண்கிறவராயிருக்கிறார்.  என்னவெனில் தோலிலே வெள்ளையான தடிப்பு இருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்த தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால் , அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்.  அவன் தீட்டுள்ளவன் அவனை எங்கும் அடைத்து வைக்காமல் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்.  இவை இரண்டாம் வகை குஷ்டம்.  

ஆனால் ஆசாரியன் பார்க்கும் போது, தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி கால் வரையும் தேகம் முழுவதையும் மூடியிருக்க கண்டால், அது சரீரம் முழுவதையும் மூடியிருக்கிறதால்  அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்க கடவன். அவன் உடம்பெல்லாம் வெண்மையாயிருக்கிறபடியால் அவன் சுத்தமுள்ளவன் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இவை மூன்றாம் வகை குஷ்டம். ஆனால் மூன்றாம் வகை குஷ்டம் சுத்தமுள்ளது என்று தீர்க்கப்பட்டாலும்  இரண மாம்சம் அவனில் காணப்பட்டால் அவன் தீட்டுள்ளவன்.  அவனை கர்த்தர் தீட்டுள்ளவன் என்றும், அது குஷ்டம் என்றும் தீர்க்கிறார்.  

ஆனால் இரண மாம்சம் மாறி வெண்மையானால் அவன் ஆசாரியனிடம் வந்து ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால் அவனை கர்த்தர் சுத்தமுள்ளதென்று தீர்க்கும்படியாக  கூறுகிறார். ஏனென்றால்  

ஏசாயா 1:18  

வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் நாம் நம்முடைய பாவங்களை உணர்ந்து கர்த்தரிடத்தில் மன்னிப்புகேட்டு ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் கழுவி சுத்திகரித்தால்  உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்.  அப்போது கர்த்தர் நம்மை சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறார். மேலும் உதாரணமாக லூக்கா 5:12-14

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.

இங்கு நாம் பார்க்கும் போது, குஷ்டரோகி இயேசுவினிடத்தில் முகங்குப்புற விழுந்து உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொல்ல, அவர் தமது கையை நீட்டி எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்றார். அப்படியே சுத்தமானான்.  பின்பு ஆசாரியனிடத்தில்  காண்பித்து , மோசே கட்டளையிட்டபடியே பலிசெலுத்து என்று இயேசு சொல்கிறார்.  இதிலிருந்து தெரிய வருவது நம்மை சுத்தமாக்குகிறவர் தமக்கு சித்தமானால் செய்கிறார். 

ஆனால் லூக்கா 17:11-19

பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.

அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:

இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.

அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது பத்து குஷ்டரோகிகள் இயேசுவுக்கு தூரத்திலே நின்று,  இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிட்டாா்கள்.  அப்பொழுது இயேசு ஆசாாியா்களுக்கு உங்களை காண்பியுங்கள் என்றபோது அவா்கள் போகையில் சுத்தமானாா்கள்.  இந்த காாியம் இயேசுவின் வாயிலிருந்து புறப்பட்ட வாா்த்தையினால் ஆரோக்கியமானாா்கள். சுத்தமானவர்களில் ஒன்பது பேர் திரும்பி இயேசுவினிடத்தில் வரவில்லை.   ஒருவன் மாத்திரம் திரும்பி வந்தான், அவன் அந்நியனாயிருந்தான்.  அவனிடம் இயேசு சொல்வது நீ எழுந்து போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.  

இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் நாம் பாவம் போக்கி இயேசுவின் வார்த்தையினால் சுத்திகரித்தால், அவர் பேரில் நமக்கு உண்டாகிற விசுவாசம் நம்மை இரட்சிக்கும்.   இவ்விதம் நாம் யாவரும் அனுதினம் நம்முடைய பாவம் கழுவி, இயேசுவின் வார்த்தையினால் சுத்திகரிப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.