தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 2: 23 

முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை உதிர ஊறலால் தீட்டுப்படாதபடி பாதுகாக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அவிசுவாசிகளோடு இணைந்தால் அசுத்தமாகி விடுவோம் என்றும், அதனால் நாம் அந்த அசுத்தத்தில் விழுந்து நமக்குள் பெற்றிருந்த நித்திய ஜீவனை இழந்து விடுவோம் என்றும், அதனால் எச்சரிப்போடு கூட நடந்து பரிசுத்தத்தை நாட வேண்டும் என்று தியானித்தோம்.  இதனுடைய கருத்துக்களை சில திருஷ்டாந்தங்களான உதாரணங்களோடு கர்த்தரிடத்திலிருந்து கற்றுக் கொண்டோம்.  

மேலும் கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல சொன்ன காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 12: 2-4

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.

எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.

இதன் கருத்துக்கள் என்னவெனில் ஸ்திரீகள் கர்ப்வதியாகி ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தால், அந்த ஸ்திரீகள் சூதக ஸ்திரீகள் விலக்கமாயிருக்கும் நாட்களுக்கு சரியாக ஏழு நாள் தீட்டாயிருப்பாள். பழைய ஏற்ப்பாட்டின் காலத்தில் எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ணும்படியாக கர்த்தர் சொல்கிறார்.   அந்நாட்களில் விருத்தசேதனம் என்பது நுனித்தோலின் மாம்சம் நீக்குதல். அது பிள்ளையை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்தல்.    அவ்விதம் நாமும் பிள்ளைகளை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கிறவர்கள் பிள்ளைகள் பிறந்ததிலிருந்து எட்டாம் நாளில் கர்த்தருக்கென்று கொடுக்க வேண்டும்.   

பின்பு பிள்ளையை பெற்றெடுத்த ஸ்திரீயானவள் தன் உதிர சுத்திகரிப்பு நிலையிலே முப்பத்துமூன்று நாட்கள் இருக்க வேண்டும்.  சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான எந்த வஸ்துவை தொடவும், பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவும் கூடாது என்று கர்த்தர் சொல்கிறார்.  இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால்   ஆண்பிள்ளையை கர்த்தருகென்று எட்டாம் நாளில் ஒப்புக்கொடுக்கும் போது தேவாலயத்திற்கு தகப்பன் மட்டும்தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பது தெரிகிறது.  

அல்லாமலும் பெண்பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள், சூதக ஸ்திரியை போல இரண்டு வாரம் தீட்டாயிருந்து,  பின்பு அறுபத்தாறு நாட்கள் உதிர சுத்திகரிப்பு நிலையிலே இருக்க வேண்டும். இவ்விதமாக பெண்பிள்ளைகளை பெற்றெடுத்த ஸ்திரீகள் எண்பது நாட்கள் பரிசுத்த வஸ்துக்களை தொடவோ, பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கவும் கூடாது என்பது தேவன் நமக்கு தந்திருக்கிற கட்டளை.  அதின் பிரகாரம் நாம் நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

லேவியராகமம் 12:6-8

அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒருவயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.

அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.

அல்லாமலும் ஒரு ஸ்திரீயானவள் ஆண் பிள்ளையாவது, பெண் பிள்ளையையாவது பெற்றால் அவரவருடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினப்  பின்பு, கர்த்தரின் சந்நிதியில் வரவேண்டுமானால், தாங்கள் அவரவர் ஆத்துமாவை மீண்டும் பாவ அறிக்கை பண்ணி,  தாங்கள் செய்த குற்றத்தினிமித்தம் சரீரம் முழுமையும் பலியான காணிக்கையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும் போது தான் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கி சுத்தமாவாள். இவ்விதமாக செய்வது தான் ஆண் பிள்ளையையாவது, பெண் பிள்ளையையாவது பெற்றவளை குறித்த பிரமாணம்.   

இவ்விதமான சுத்திகரிப்பு செய்ய தங்களிடத்தில் சக்தியில்லை என்றிருந்தால், தாங்கள் பெற்றுக்கொண்ட ஆத்தும பெலனுக்கு தகுந்த வண்ணம் தங்களை ஒப்புக்கொடுத்து பாவ அறிக்கை செய்து, சுத்திகரித்தால் அப்படிபட்டவர்கள் சுத்தமாவார்கள். 

இதனை வாசிக்கிற அன்பானவர்களே, இந்த காரிய்ஙகளில் அநேகரிடத்தில் கட்டாயம் குறைகள் காணப்படும். அவ்விதம்  பாவ உணர்வு வந்து நாம் ஒப்புக்கொடுத்தால் நம் பாவங்கள் கர்த்தர் மன்னித்து , நம்மை சுத்திகரித்து, நம்முடைய தீங்குகள் நீக்கி நம்மை ஆதரிப்பார்.  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.