தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 தெசலோனிக்கேயர் 4: 7

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை அவிசுவாசிகளோடு பங்கிருந்தால் அசுத்தமாகிவிடுவார்கள், ஆனால் பரிசுத்தத்தை நாடவேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை எந்தவிதமான அசுத்தங்களோடும் கலவாதபடி நடந்துக் கொள்வதற்கான காரியங்களை திருஷ்டாந்தத்தில் கூட நாம் தியானித்தோம்.  அசுத்தங்களும், அருவருப்புகளும் என்னவென்பதின் விளக்கங்கள் என்றால் புறஜாதிகளாகிய அவிசுவாசிகள் செய்கிற பொல்லாத கிரியைகளில் நாம் கலந்துக்கொள்ளக் கூடாது.  அவ்விதம் கலந்தால் நாமும்  தீட்டாகிவிடுவோம் என்பதை திருஷ்டாங்களில்கூட நாம் தியானித்தோம்.   

கழிந்த நாளில் நாம் தியானித்தப் பகுதியில் மரபாத்திரம், வஸ்திரம், தோல், பை, ஆயுதம் இவையெல்லாமே கர்த்தரின் பார்வைக்கு நாம் தான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எப்படியெனில் இவைகளின் மேல் செத்த ஊரும் பிராணிகள் விழுந்தால் அது சாயங்காலம் மட்டும் தீட்டாயிருக்கும் என்றும் அதனால் அந்த பாத்திரங்கள் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருப்பது, காரணம் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது அசுத்தங்களில் நாம் சிக்கி விட்டால் அல்லது புறஜாதிகளாகிய அவிசுவாசிகளோடு நாம் கலந்துரையாடினால் சாயங்காலத்திற்குள்ளாக தேவனுடைய ஆவியினால் நாம் நம்மை சுத்தம் செய்ய வேண்டும்.  

நம்முடைய விசுவாச வாழ்க்கையின்  ஆரம்பத்தில், அதாவது நாம் இரட்சிப்பை பற்றி அறிந்தும் ஞானஸ்நானத்தினால் கிறிஸ்துவோடு உடன்படிக்கை எடுப்பதற்கு முன்பாக, நாம் மண்பாத்திரம் என்றும்,  ஞான்ஸ்நானம் பெற்றப்பிறகு வஸ்திரம் என்றும்,  பின்பு நம்முடைய ஆத்துமா தேவனுடைய  ஆவியினால் உயிர்பிக்கப்பட்டபிறகு தோல் என்றும், பின்பு கர்த்தர் தம்முடைய வேலைக்காக ஆயத்தம் பண்ணும் போது  பை என்றும்,  மேலும் அவர் தம்முடைய கையின் கருவியாக பிரயோஜனப்படுத்தும் போது ஆயுதம் என்றும் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

ஆனால் மண்பாண்டம் என்பது விசுவாச வாழ்க்கையின் ஆரம்பம்.  என்னவெனில் உடன்படிக்கை எடுப்பதற்கு முன்பு நாம் மண்ணான சரீரம், அந்த சமயங்களில் புறஜாதிகளோடு கலந்தால் அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் உடைத்துப்போடும்படியாக கர்த்தர் சொல்கிறார். அதென்னவெனில் மீண்டும் புதிய மனந்திரும்புதலை கூறுகிறார்.  

ஆனால் நீரூற்றும், மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும் என எழுதப்பட்டிருப்பது,  அது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தப் படுகிறது. இது தேவனுடைய வசனத்தை காட்டுகிறது. என்னவென்றால் வசனமாகிய ஜீவ ஊற்றையும், கிணறாகிய கிறிஸ்துவையும்  யாரும் அசுத்தப்படுத்த முடியாது.   செத்த பிராணிகளை தொடுகிறவன் தீட்டுப்படுவான், என்று நம்மைக்குறித்துக் கர்த்தர் சொல்கிறார்.  

அதுபோல் விதை தானியத்தின் மேல் செத்தப்பிராணி விழுந்தால், விதை தானியம் தீட்டுபடாது, இதுவும் இரட்சகரைக்காட்டுகிறது.  ஆனால் வார்க்கப்பட்ட விதையின் மேல் விழுந்ததினால் அது உங்களுக்கு தீட்டாயிருக்கக்கடவது, இது நாம் ஒவ்வொருவரையும் காட்டுகிறது.  

மேற்க்கூறப்பட்டவைகளின் கருத்து என்னவெனில், கிறஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படாமல் இருக்கிறவர்களுக்குள் ஜீவன் காணப்படாது.  அவர்களுடைய ஆத்துமா செத்ததாயிருக்கிறது.  அதனால் அவர்களோடே கலவக்கூடாது என்றும் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது.  ஆனால் நம்முடைய ஆத்துமாவின் நற்பலன்களாகிய வளர்ச்சிக்கு தக்கதாக  கர்த்தர்  நம்மை பெயரிட்டு அழைக்கிறார் .  

அவற்றைக்குறித்து தான் லேவியராகமம் 12:39-43

உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும் வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

ஆதலால் பிரியமானவர்களே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் அசுத்தமானதை தொடவோ, புசிக்கவோக்கூடாது என்பதற்காக கர்த்தர் எஸ்றாவை வைத்து இஸ்ரவேலரோடு சொல்வது 

எஸ்றா 10: 10,11

அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

மேலே கூறப்பட்ட வார்த்தைகளின் படியே இஸ்ரவேலர் அசுத்தத்தை விட்டு விலகினார்கள்.  ஆனால் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டவர்கள் அசுத்தமானவர்கள் அல்ல என்றும்  அவர்களில் ஜாதி வித்தியாசம் இல்லை என்பதையும், எல்லோரும் ஒரே பரிசுத்த ஜாதியாக விளங்குவார்கள் என்றும் கர்த்தரின் வசனம் சொல்லுகிறது.  

ஆதலால் பிரியமானவர்களே எல்லோரும் ஒரே பரிசுத்த ஜாதியாக விளங்கும்படியாக  

லேவியராகமம் 11: 45-47

நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

மேலே கூறப்பட்ட வசனங்களை கருத்தோடு வாசித்து தியானித்து  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.