தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எண்ணாகமம் 23: 9

கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை அசுத்தங்களோடு கலக்கக்கூடாது. திருஷ்டாந்தத்தோடு விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அக்கிரமச் செயல்களாகிய மாம்ச சிந்தைகள் முழுமையாக அகற்றப்படா விட்டால் கர்த்தர் தம்முடைய பட்டயத்தால் கொல்லுகிறவரும், அதனால் நம்முடைய உள்ளான நகரம் பானை என்றும், கொல்லப்பட்ட நம்முடைய ஆத்துமா இறைச்சி என்றும், அவ்விதமாக வாழ்கிறவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்களும், அசுத்தமானவர்களும் என்று சொல்லப்படுகிறது. மேற்க்கூறப்பட்ட காரியங்கள்  புறஜாதிகளுக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

இவ்விதமாக அருவருப்பாக வாழ்கிறவர்களுடைய ஆலோசனைகளை நாம் ஒருபோதும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் தியானித்தோம்.   மேலும் பறவைகளில் நாலு காலால் நடமாடுகிறவைகளில் அருவருப்பானவைகளின் உடலைத்  தொடுகிறவன் தீட்டுப்பட்டிருப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் அவைகளின் உடலை சுமந்தவன், தன் வஸ்திரங்களை தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பான் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் மிருகங்களை குறித்து கர்த்தர் சொல்லுகிறது விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும், அசைப்போடாமலும் இருக்கிற மிருகங்கள் நமக்கு அசுத்தமாயிருப்பதாக என்றும் அவைகளை தொடுகிற எல்லாரும் தீட்டுபடுவார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. 

அல்லாமலும் கர்த்தர் சொல்லுகிறது நாலு காலால் நடக்கிற சகல ஜீவன்களிலும், உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் அசுத்தமாயிருக்கும். அவைகளின் உடல்களை தொடுகிற யாவரும் தீட்டுப்பட்டிருப்பார்கள்.  ஆனால் அவைகளின் உடல்களை சுமந்தவன்  தன் வஸ்திரங்களை தோய்க்க கடவன் என்றும், சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அடுத்தப்படியாக தரையில் ஊரும் பிராணிகளில் தீட்டாயிருப்பவைகள் யாதெனில் பெருச்சாளி, எலியும், சகலவித ஆமையும், உடும்பும் ஓணானும், பல்லியும் பச்சோந்தியும், இந்த வகை  ஊரும் பிராணிகள் தீட்டானவைகள்.   இவற்றில்  செத்ததை யாராவது தொட்டால் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.  

மேறக்கூறப்பட்டவைகளில் செத்தது எவற்றின் மேல் விழுந்தாலும் அவை சாயங்காலம் மட்டும் தீட்டாயிருக்கும்.  அது எவ்வகையானாலும் மர பாத்திரமோ, வஸ்திரமோ, தோலோ, பையோ, அல்லது வேலை செய்தற்குரிய ஆயுதமானாலும் சாயங்காலமட்டும் தீட்டுபட்டிருக்கும், அதை தண்ணீரில் போட்டு சுத்தமாக்க வேண்டும்.  ஆனால் அவைகளில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால்  அதற்குள் இருக்கும் யாவும் தீட்டுப்பட்டிருக்கும்.  அதனை நாம் உடைத்துப்போட வேண்டும்.  மேலும் புசிக்கதகும் போஜன பதார்த்தங்கள் மேல் அந்த தண்ணீர் பட்டால் அது தீட்டாகும். குடிக்க தக்க எந்த பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டாகும்.  ஆனால் அவைகளின் உடல் எதின் மேல் விழுதோ அதுவும் தீட்டுபடும்.  மண்தொட்டியில் விழுந்தால், அது தீட்டாயிருக்கும். ஆனால் அது மண்தொட்டி உடைக்கப்பட வேண்டும்.   

ஆனாலும் நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும். ஆனால் பிராணிகளின் உடலை தொடுகிறவன் தீட்டாயிருப்பான்.  ஆனால் விதை தானியத்தின் மேல் விழுந்தால், விதை தானியம் தீட்டுப்படாது.  மேலும் அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருந்த விதையின் மேல் விழுந்தால், அது தீட்டாயிருக்கக்கடவது என்று வேத வசனம் எழுதப்பட்டிருக்கிறது.  

பிரியமானவர்களே, மேற்க்கூறப்ட்ட காரியங்களைக் குறித்து நாம் கருத்தில் வைத்து கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். அல்லாமலும் அதில் உள்ளடங்கிய அர்த்தங்கள் என்னவெனில் கிறிஸ்துவின் இரத்தத்தோடு உடன்படிக்கை எடுத்த பிறகு, அந்த ஆத்துமா இரட்சிப்பின் அனுபவத்தில் வந்த பிறகு, விருத்தச்சேதனம் பெற்றுக்கொள்ளாத, அதாவது, இரட்சிக்கப்படாத எந்த ஆத்துமாக்களோடும் எந்த உறவும் வைக்கக் கூடாது என்பதை தேவன் நமக்கு விளக்கி திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.   

அதைக் குறித்து தான் 2 கொரிந்தியர் 6:14-18  

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது அவிசுவாசிகள் பேலியாளின் மக்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ளமுடிகிறது. பேலியாள் என்பது பிசாசின் பிள்ளைகள்.   அதனால் மீட்கப்பட்ட ஜனம், அதாவது விசுவாசிகள், அவிசுவாசிகளிடத்தில் எந்த விதமான உறவும் வைக்காமல், அவர்கள் தனியே பிரிந்து வாழவேண்டும் என்று சொல்லப்படுகிறது.அதனால் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று வேத வசனம் சொல்கிறது.   

அதைக்குறித்து தீத்து 1:14-16  

விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.

அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

இதற்குரிய திருஷ்டாந்தம் தான் லேவியராகம் புஸ்தகத்தில் ஆத்துமா பூரணப்படாதவர்கள், அதாவது தேவ சாயல் அடையாதவர்களை குறித்து மிருகங்கள், பறவைகள்,  ஊரும் பிராணிகள் என்று கர்த்தர் பல தரப்பில் சொல்கிறார், ஏனென்றால் அவர்களில் ஆத்துமாவின் சாயல்  இல்லை.  இதனை வாசிக்கிற அன்பானவர்களே அவரவர் தன்னை தான் சோதித்து அறிய வேண்டும்.  

அதைக்குறித்த தேவ வார்த்தை எஸ்றா 10:1-11

எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.

அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,

மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.

அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

இந்த வசனங்களை  நாம் தியானித்தால் மேலே கூறப்பட்ட விளக்கங்கள் நமக்கு புரியும்.   ஆதலால் பிரியமானவர்களே, நாம் தேவ சத்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.  இதன் விளக்கங்கள் கர்த்தருக்கு சித்தமானால் மறுநாளில் தியானிப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.