தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 1: 19

நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அக்கிரமத்தின் செயல்களாகிய மாம்ச சிந்தைகள் அகற்றப்பட வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை அந்நிய அக்கினியால் அழிந்து போகாதபடி காத்துக் கொள்ள வேண்டுமானால், தேவன் நியாயபிரமாணத்தில் நமக்கு நித்திய கட்டளையாக தந்திருக்கிற ஒவ்வொரு கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த கட்டளைகளில் சில காரியங்களை நாம் தியானித்தோம்.  அவைகள்  என்னவெனில் நாம் புசிக்க வேண்டியவைகளும், புசிக்க தகாதவைகளை குறித்தும் தியானித்தோம். கர்த்தருடைய கட்டளைகளில் அசுத்தமும், அருவருப்புகளும் உள்ள யாதொன்றை புசிக்கவோ, தொடவோ கூடாது என்று கர்த்தர் சொல்கிறார். அவ்விதமான காரியங்களை தொட்டவனும், புசித்தவர்களும் தீட்டாயிருப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

அல்லாமலும், நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆட்டுக்குட்டியானவராகிய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அருவருப்புகளோடு காணப்படுகிற புறஜாதிகள் என்று சொல்லப்படுகிறது.  மேலும் புறஜாதிகளை குறித்து கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில் 

எசேக்கியல் 11:1-13  

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்.

இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.

ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார்.

அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.

இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.

என் கட்டளையின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது, அதின் ஆவிக்குரிய விளக்கங்கள் என்னவென்றால் வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர்கள் இருந்தார்கள் என எழுதப்பட்டிருக்கிறது.  அவர்கள் நம்முடைய உள்ளத்தில் அக்கிரம நினைவுகளை நினைக்க வைத்து துராலோசனை சொல்லுகிற மனுஷர். நாம் தேவனுடைய வீடாக மாற விடாதபடி நம்மை அக்கிரம நினைவுகளால் நினைக்க வைப்பார்கள். அவர்கள் வீடு கட்டுவதற்கு உரிய காலமில்லை என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.  இது என்னவென்றால் மனுஷர்களுடைய உள்ளம் அக்கிரம சிந்தைகளினால் ஆத்துமா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள் என்றும், அதனால் அந்த நகரம் பானை என்றும்  கொலை செய்யப்பட்ட ஆத்துமா இறைச்சி  என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  

அதனால் கர்த்தர் சொல்லுகிறது அக்கிரமக்காரரை அந்த நகரத்தை விட்டு புறம்பாக்குவேன் என்று சொல்கிறார்.  இப்படியாக  அக்கிரமத்தினால் ஆத்துமா மரித்து கிடக்கிற புறஜாதிகளோடு அவர்களின் ஆலோசனையின்படி  நடந்தாலோ, அவர்கள் தருகிற உபதேசத்திற்குள் நாம் நுழைந்து அவைகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய ஆத்துமாவை அருவருப்புகளாலும், அசுத்தங்களினாலும் தீட்டுப்படுத்தினாலோ, நாம்  அசுத்தமானவைகளை புசிக்கிறோம் என்று தேவ வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது.  

அவற்றைக் குறித்து தேவனுடைய வசனம் சொல்லுகிறது என்னவெனில்

ஏசாயா 66:15-18

இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.

கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

நம்முடைய உள்ளத்தில் அக்கிரம சிந்தைகள் இருக்குமானால், கர்த்தர் கோபத்தை உக்கிரமாகவும், கடிந்துக்கொள்ளுதலை அக்கினி ஜீவாலையாகவும் செலுத்த  கர்த்தர் நம்முடைய உள்ளத்தில், வாழ்க்கையில் அக்கினியோடும், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார், அவ்விதம் மாம்ச சிந்தை உள்ள எல்லாரோடும் வழக்காடுவார். அதோடு மட்டுமல்லாமல் மாம்ச சிந்தை உள்ளவர்களை குறித்து தேவன் சொல்வது, தங்களை தாங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறவர்களும், சபைகளின் நடுவே ஒருவர் பின் ஒருவராய் சுத்திகரித்து கொள்கிறவர்களும், பன்றியிறைச்சியையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் கர்த்தரால் கொலையுண்டு, சங்கரிக்கப்படுவார்கள் என்று,நம்முடைய மாம்ச சிந்தை உள்ள ஆத்துமாவுக்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். 

ஆதலால் பிரியமானவர்களே இந்த வார்த்தைகளை நாம் நன்றாக தியானித்து நம்முடைய ஆத்துமா மிகவும் சுத்தத்தோடு காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்து கொள்ள நன்மையானவைகளை புசிக்க வேண்டும். ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.