கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
தேவ ஆவியால் தேவன் நம்மை நிரப்பும்போது
மாம்ச சிந்தைகள் நம்மை விட்டு மாற்றப்படவேண்டும். நம்மை ஒரு முறை தேவன் இரட்சித்து,
அவருடைய இரத்தத்தால் மீட்பை பெற்ற பிறகு நாம் மாம்சத்திற்குரிய காரியங்களை செய்தால்
அது தேவனுக்கு விரோதமான பகை. இவ்விதமாக தான்
நோவா குடும்பம் பேழையில் காக்கப்பட்ட பின்பு பலுகி பெருகி தொடங்கின பிறகு மீண்டும்
பாவம் செய்தார்கள்.
அதனால் தேவன் தேராகுடைய குமாரனாகிய
ஆபிராமை அழைக்கிறார்.
ஆதியாகமம் 12:1-5
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும்,
உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப்
போ.
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன்
பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச்
சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்.
லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து
வயதுள்ளவனாயிருந்தான்.
ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய
லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த
ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான்
தேசத்தில் சேர்ந்தார்கள்.
ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத்
தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே
ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
இதிலிருந்து, நமக்கு தெரியவருகிறது
என்னவென்றால் மக்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட தங்கள் பாரம்பரிய முன்னோர்களின் கிரியைகளை
விட்டு விட்டு கானான் தேசமாகிய கிறிஸ்துவை
சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்விதமாக ஆபிராமிடத்தில்
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்று
சொல்கிறார்.
கலாத்தியர் 3:6
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக
எண்ணப்பட்டது.
ஆபிராம் தேவன் சொன்ன பிரகாரம்
ஆரானை விட்டு புறப்படுகிறான். அப்பொழுது ஆபிராம்
லோத்தினிடத்தில் எனக்கும் உனக்கும்,
என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பர்க்கும்
வாக்குவாதம் வேண்டாம்.
இந்த தேசமெல்லாம் உன் முன்
இருக்கிறது அல்லவா, உனக்கு விருப்பமான இடத்தை தெரிந்து கொள் என்று சொல்லுகிறான்.
ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான்
நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதா யிருக்கக்கண்டான். கர்த்தர்
சோதோமையும் கோமோராவையும் அழிக்கு முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய
தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது.
லோத்து கண்களுக்கு விருப்பமான
தேசத்தை தெரிந்து கொண்டான். ஆனால் ஆபிராம் கானானில் குடியிருந்தான்.
லோத் சோதோமுக்கு நேரே கூடாரம்
போட்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும்
கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
ஆதியாகமம் 13:14-16
லோத்து ஆபிராமைவிட்டுப்
பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து
வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும்
நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்.
ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்" என்றார்.
இவ்விதமாக, தேவனாகிய கர்த்தர்
ஆபிராமை ஆசீர்வதிக்கிறதை பார்க்கிறோம். ஆனால் லோத்தை விட்டு ஆபிராம் வந்த பிறகு தான்
தேவன் ஆபிராமை ஆசீர்வதிக்கிறார். உன் சந்ததி என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்.
கலாத்தியர் 3:14
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்,
ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும்
இப்படியாயிற்று.
கலாத்தியர் 3:16
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்
பட்டன. சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச்
சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே.
கலாத்தியர் 3:7-9 -
ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ
அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்கள். ஜெபியுங்கள்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி
நாளை