தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 26:13

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை விட்டு வழிதப்பி போகாமலும், வஞ்சிக்கப்படாமலும் கர்த்தரையே சார்ந்து வாழவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சாத்தானுடைய தந்திரத்தால் விழுந்து விடக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது  என்னவென்றால் 

2 இராஜாக்கள் 18:17-19 

ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது அசீரிய ராஜா, தன்னுடைய ஆட்களை எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினபோது, அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று, ராஜாவை அழைப்பித்தார்கள், அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும்,ஆசாப்பின் குமாரனாகிய யோவாக்  என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்கு புறப்பட்டு போனார்கள். ரப்சாக்கே அவர்களை நோக்கி எசேக்கியாவுக்கு சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்னவென்றால் நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? என்றும் 

2 இராஜாக்கள் 18:20-25 

யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?

இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?

இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.

மேற்கூறிய வார்த்தைகளையெல்லாம் எசேக்கியாவின் மனுஷர்களாகிய இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகுடமும்  ரப்சாக்கே சொல்லும் போது; அவர்கள் ரப்சாக்கேயை பார்த்து சீரிய  பாஷையிலே பேசும்; அது எங்களுக்கு தெரியும் என்றும், அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூத பாஷையிலே பேச வேண்டாம் என்றார்கள்.  அதற்கு ரப்சாக்கே சொன்னது 

2 இராஜாக்கள் 18:27-36  

அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.

கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,

அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.

ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.

ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

மேற்கூறப்பட்ட வார்ததைகள் எல்லாம் எசேக்கியா மூலம் ஜனங்கள் கர்த்தர் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து விடுவார்கள் என்று பயந்து, அசீரியா ராஜா ரப்சாக்கேயைக்கொண்டு அறைகூவி எல்லா ஜனங்களுக்கும் தெரியட்டும் என்றும், எல்லாரும் அசீரிய ராஜாவை சேவிக்கட்டும் என்றும் இந்த காரியத்தை அறிவிக்கிறான்.  அவன் அறிவித்ததை கேட்ட எசேக்கியாவின் மனுஷர்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து இந்த வார்த்தைகளை அறிவித்தார்கள்.  

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் நமக்கு கர்த்தர் திருஷ்டாந்தத்திற்கென்று வைத்திருக்கிறார்.  என்னவென்றால் மேடைகள் மற்றும் சிலைகள் மாற்றப்பட்டு, வெண்கல சர்ப்பம் உடைக்கப்பட்டதும், எசேக்கியா கர்த்தரை மட்டும் சார்ந்து வாழ்கிறான் என்பதும், கர்த்தர் அவனுக்கு எல்லாவற்றிலும் அனுகூலமாகயிருந்தால், ஜனங்கள் கர்த்தரை மட்டும் தேடுவார்கள் என்று அவனுக்கு பயம் உண்டானதால் அவன் எல்லா ஜனங்களையும் கர்த்தரை விட்டு வழி தப்ப பண்ணலாம் என்று நினைத்து, இவ்விதம் கர்த்தரை விட்டு அகற்றும்படியாக காரியங்களை நடப்பிக்கிறான்.  இதனை போல் தான் நம்முடைய உள்ளத்தில் அசீரியக்கிரியைகள் கர்த்தரை விட்டு விலகி உலக அலங்காரங்களோடு வாழ கிரியை செய்துக்கொண்டிருக்கும்.  ஆதலால் நாம் பொல்லாத கருத்துக்களுக்கு நம்முடைய உள்ளம் விட்டு கொடாதபடி கர்த்தரை மட்டுமே சார்ந்து வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.