தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 5:8

கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமானப் பொல்லாப்புகளை செய்தால் சத்துருக்களால் எப்படி சிறுமைப்படுத்தபடுவோம்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய பகைஞரை கர்த்தர் அழித்து, நாம் கர்த்தரிடத்தில் முழுமனதோடு அன்புக்கூர்ந்து, வல்லமையாய் உதிக்கிற சூரியபிரகாசம் போல் கர்த்தரின் சமூகத்தில் பிரகாசிப்போம் என்று தியானித்தோம்.  அல்லாமலும் கானானிய ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்கினதும், தெபொராளும், பாராக்கும் கர்த்தரை மகிமைப்படுத்தி பாடிய காரியங்களை குறித்தும் தியானித்தோம்.  

அடுத்தப்படியாக நாம் தியானிப்பது 

நியாயாதிபதிகள் 6:1- 7

பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.

அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.

இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தர் யுத்தம் மேற்க்கொண்டு ஆத்துமாவுக்குள் இரட்சிப்பாகிய அமைதியை தந்த பிறகு, நம்மிலும் அநேகர் கர்த்தருக்கு விரோதமான பொல்லாப்பானதை செய்கிறார்கள்.  இதனை திருஷ்டாந்தபடுத்தவே இவ்விதம் கர்த்தர் நமக்கு இவ்விதமான காரியங்களை செய்கிறார்.  கர்த்தர் மீண்டும், மீண்டும் ஜாதிகளின் கையில் ஒப்புக்கொடுக்கிறது காரணம் என்னவென்றால் இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் இருக்கிறதினால்.  

மேலும் மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல் பலத்துக்கொண்டதால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும், அரணான ஸ்தலங்களையும் அடைக்கலமாக்கிக் கொண்டார்கள்.  மேலும் இஸ்ரவேல் புத்திரர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கத்தி புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து, பாளயமிறங்கி காசாவின் எல்லை மட்டும் நிலத்தின் விளைச்சலை கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும்  ஆடுமாடுகள், கழுதையையாகிலும் வைக்காதே போனார்கள்.  அவர்கள் தங்கள் மிருக ஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும்,  வெட்டுகிளிகளை போல் திரளாய் வருவார்கள்.   அவர்களும், அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்.  இந்த பிரகாரமாக தேசத்தை கெடுத்து விட அதிலே வருவார்கள்.  இப்படியாக மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்,  அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை  அவர்களிடத்திற்கு அனுப்பினார்.  

பிரியமானவர்களே,  மேற்க்கூறிய கருத்துக்கள், இஸ்ரவேலராகிய நாம் அவருடைய கற்பனை, கட்டளைகளுக்கு  கீழ்படியாமல் இருக்கிறதின் காரணமாக கர்த்தர் நமக்குள்ளால் நம்முடைய பகைஞர்களாகிய  இராட்சத ஆவிகளாகிய சத்துருக்களை அனுப்பி, விதைக்க பட்ட விதையின் விளைச்சலையும், நம்முடைய பரலோக ஆகாரத்தையும், நம்முடைய ஆடுமாடுகள், கழுதைகள் இவைகளையும் வைக்காதே போகிறது.  நம்மில் சத்துருக்கள் கூட்டம் கூட்டமாக வெட்டுகிளிகளை போல வந்திறங்குகிறார்கள்.  நம்முடைய ஆத்துமாவில் நாம் அது வரையிலும் பெற்றுக்கொண்ட எல்லா பலன்களையும் அவைகள் கெடுத்து விடுகிறது.  இவ்விதமாக நாம் மீண்டும் கர்த்தரை நோக்கி கூப்பிடும்படியாக சிறுமைபடுத்தப்படுகிறோம்.  இப்படியாக நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படுகிறோம்.   

ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்பை நாம் இழந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  அவ்விதம் யாராவது கர்த்தரால் நெருக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்று உணர்த்தப்படுவோமாகில் இப்பொழுதே நாம் கர்த்தரின் பாதத்தில் விழுந்து ஒப்புக்கொடுத்து, அவரை கூப்பிடுவோம்.  அப்போது கர்த்தர் நம்முடைய கூப்பிடுதலின் சத்தத்துக்கு  செவிக்கொடுத்து நம்மை அந்த நெருக்கத்திலிருந்து விடுதலையாக்கி இரட்சிப்பார்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.