தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 42:13 

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, அந்நிய தேவர்களோடு  சம்பந்தம் கலக்காமல், கிறிஸ்து மூலமாக ஆத்துமா இரட்சிப்பாகிய அமைதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் சோதித்தறியும் போது, நாம் கர்த்தரை விட்டு விலகாமல் எச்சரிப்போடு இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

    ஆனால் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 
நியாயாதிபதிகள் 3:1- 2 
கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,

இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்:

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கானான் தேசத்தில் நடந்த யுத்தங்களைக் குறித்து அறிந்துக்கொள்ளாதிருந்த இஸ்ரவேல் அனைவரையும் சோதிப்பதற்காகவும், இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும், அதற்கு முன்யுத்தம் யுத்தம் செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டு வைத்த ஜாதிகள் யாரென்றால் 

நியாயாதிபதிகள் 3:3 
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால்எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.   

அல்லாமலும் கர்த்தர் மோசேயைக்கொண்டு, தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலரை கீழ்படிவார்களோ என்று அறியும் படிக்கு, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.  இவ்விதமாக இஸ்ரவேல் புத்திரர், ஜாதிகள் நடுவே குடியிருந்தார்கள்.  அவ்விதமாக அவர்கள் ஜாதிகளுக்கிடையில் குடியிருந்து அவர்களுடைய குமாரத்திகளை விவாகம் பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களை சேவித்தார்கள். அப்படியாக அவர்கள் அந்நிய தேவர்களை சேவித்து, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தார்கள்.  

ஆதலால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமின் ராஜாவாகிய  கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான் ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக்கூப்பிட்ட போது  கர்த்தர் இஸ்ரவேலரை இரட்சிக்குப் படியாக காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனான ஓத்னியேல்  என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.  அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப்புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பியாத்தாமின்  ராஜாவாகிய கூசான்ரிஷதாயிமை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.  ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின் மேல் பலங்கொண்டது.  தேசம் நாற்பது வருஷம் அமைதியாயிருந்து. 

பிரியமானவர்களே மேற்க்கூறியதின் கருத்துக்கள் என்னவெனில், நாம் புறஜாதிகளிடையிலிருந்து நம்மை பிரித்தெடுத்ததால், கர்த்தர் நம்மை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார். காரணம் என்னவெனில் நம்மிடம் புறஜாதிகளின் கிரியைகள் முழுமையும் மாறாமல் அந்நியரோடு நாம் தொடர்பு வைப்பதும், அவர்களோடு உறவும் உண்டாகிறதினால் அந்நிய தேவர்களை சேவிக்கிறவர்களாகிறோம்.  ஆதலால் கர்த்தர் நம்மிடம் கோபமுள்ளவராக சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்து நம்மை நெருக்கத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்.  அவ்விதம் நாம் நெருக்கப்படும்போது, நம்முடைய பாவம், அக்கிரமம், மீறுதலாகிய நம்முடைய குறைகளை கர்த்தரிடத்தில் அறிக்கைப்பண்ண வேண்டும்.  அவ்விதம் அறிக்கைபண்ணும் போது, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவாகிய இரட்சகரை நமக்காக நம் உள்ளத்தில் அனுப்புகிறார்.  அவ்வாறு கிறிஸ்து நமக்குள்ளில்  யுத்தம் செய்து சத்துருவை மேற்கொண்டு வெற்றிப்பெறுகிறார் என்பதற்கு திருஷ்டாந்தப் படுத்துகிறார்.  

அவ்விதம் கிறிஸ்து வெற்றிப்பெறும் போது, நம் உள்ளத்தில் புறஜாதிகளின் கிரியைகள் அகற்றப்பட்டு, நீதியாகிய கிரியைகள் பெருகும் போது, நம் ஆத்துமாவுக்கு அமைதிக்கிடைக்கும்.  அவ்விதம் ஆத்துமா இரட்சிப்பாகிய அமைதி கிடைக்கும் படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.