தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 3 : 16    

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் விட்டு விட்ட துர்கிரியைகளை மீண்டும் பின்பற்றி வழிவிலகி போகாமல் எச்சரிக்கையாக இருந்து, நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொரும் கர்த்தரிடத்திலிருந்து பெற்ற ஆத்தும நன்மைகளை காத்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு நாம் தியானித்தோம்.  

அடுத்ததாக நாம் தியானிக்கிற வேதபகுதியானது 

யோசுவா 23:9-16  

கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.

உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,

உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.

இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய மூப்பரையும், தலைவரையும்,  நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் அழைத்து சொன்னது என்னவென்றால், கர்த்தர்  உங்களுக்கு முன்பாக பலத்ததும், பெரியதுமான ஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்தியிருக்கிறார்.  இந்நாள் மட்டும் உங்களுக்கு முன்பாக ஒருவரும் நிற்கவில்லை.  மேலும் உங்களில் ஒருவன் ஆயிரம் பேரை துரத்துவான்: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு சொன்னபடி அவர்தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.   ஆகையால் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும் படி, உங்கள் ஆததுமாக்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்கிறார்.

பிரியமானவர்களே, கர்த்தரிடத்தில் மட்டுமாக அன்புகூர விடாமலிருந்த பலவித உலகவிதமான துர்செயல்கள் நம்மை விட்டு மாற்றினபடியால் தான் கிறிஸ்துவை சுதந்தரிக்க முடிந்தது.  பின்னும் நம் உள்ளம் தேவனிடத்தில் அன்புப் பெருக வேண்டுமானால், அனுதினம் நம்முடைய உள்ளம் புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அல்லாமலும் நீக்கப்பட்ட காரியங்கள் ஒன்றும் நம் உள்ளத்திற்குள் வருவதற்கு இடம்கொடுக்காதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் எச்சரிக்கையாகயிருக்க வேண்டும்.  இவ்விதம் நாம் செய்யாமல் பழைய வாழ்க்கைக்குள் வருவோமானால், பின்பு இந்த ஜாதிகளை கர்த்தர் நம்மிடத்தில் இருந்து துரத்தமாட்டார் என்றும், கர்த்தர் நமக்கு தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து (கானன் ஆகிய கிறிஸ்து) நம்முடைய ஆத்துமா  அழியும் மட்டும், நமக்கு கண்ணியாகவும், வலையாகவும், விலாக்களுக்கு சவுக்காகவும், கண்களுக்கு  முள்ளுகளாகவும், துரத்தின ஜாதிகள் இருப்பார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். 

மேலும் கர்த்தர் நம்மிடத்தில் சொன்ன வார்த்தைகள் ஒன்றும் தவறாமல் நிறைவேற்றுகிறார்.  அவ்விதம் எப்படி தவறாமல் நிறைவேற்றுகிறாரோ, அப்படியே கர்த்தர் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறி, அந்நிய தேவர்களை, சேவித்து, (அந்நிய கிரியைகள்) அவைகளை பணிந்துக் கொள்ளுங்காலத்தில், இந்த நல்ல தேசத்திலிருந்து நிர்மூலமாக்குமட்டும், தீமையான காரியங்களை  வரபண்ணுவார்.  கர்த்தருடைய கோபம் அவ்விதம் நடக்கிறவர்கள் நடுவில் பற்றி எரியும்.  நம்முடைய ஆத்துமா கெட்டு அழிந்து போகும்.  

ஆதலால் நாம் ஒருபோதும் கர்த்தர் தந்த நனமையாகிய நித்திய ஜீவன் கெட்டுப் போகாமல் ,  நாம் அழிந்து போகாதபடி நம்மை காக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.