தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 128:6 

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் உண்டாகும் படி வழிமுறைகள் வகுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் விவேகத்தை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம். ஏனென்றால் விவேகம் இல்லாமல் இருப்போமானால் நம்முடைய ஆத்துமா கெட்டுப்போகும்; அதன் காரணம் நம்முடைய சிந்தைகள் தவறி போய் விடும்.  ஆதலால் நாம் ஒவ்வொருவரும் விவேகம் பேணிக்கொள்ள வேண்டும்.  

மேலும் முந்தின நாளில் தியானித்த கருத்துக்கள் என்னவென்றால், ரூபன் புத்திரரும், காத் புத்திரரும், மனாசேயின் பாதி கோத்திரத்தோரும் தனியாக இஸ்ரவேல் புத்திரருக்கடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தை கட்டினதால், யுத்தம்பண்ணும்படியாக  சீலோவிலே இஸ்ரவேல் புத்திரர்கள் கூடினதும், மற்றும் ஆசாரியனாகிய எலெயாசாருடைய  குமாரனாகிய பினெகாசையும், மற்றும் எல்லா கோத்திரங்களிலும் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாக பத்து பிரபுக்களையும அனுப்பினார்கள். இஸ்ரவேல் சேனைகளுகுள்ளே ஆயிரவர்களுக்குள்ளே, ஒவ்வொருவனும் தன்தன் குடும்பத்துக்கு தலைவனாயிருந்தான்.  ஆனால் அவர்கள் இவர்களிடத்தில் வந்து  

யோசுவா 22:16-20    

நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?

பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.

நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.

உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.

சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.

இந்த மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, இவர்கள் பீடத்தை கட்டினதால், நீங்கள் தேவனுக்கு விரோதமாக பண்ணின துரோகம் என்ன? என்று கேட்கவும், பேயோரின் அக்கிரமம் நமக்கு போதாதா?  என்று கேட்கவும், மற்றும்   இஸ்ரவேலருடைய வாழ்விலே கர்த்தர் அனுப்பின வாதை, இன்றைக்கு வரையிலும் நீங்கி, நாம் சுத்தமாகவில்லையே என்று சொல்லி, இந்நாளில் கர்த்தரை பின்பற்றாதபடி புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாக கலகம் பண்ணுவீர்களோ? அப்படியானால் கர்த்தர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடும் கோபம் கொள்வாரே என்று அவர்களிடம் கேட்கவும், அப்படி காணியாட்சி நிலம் தீட்டாயிருந்ததானால், நீங்கள் எங்கள் நடுவே வந்து காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே;   ஆனால் நீங்கள், நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடம் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும், எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்; 

மேலும் சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்து துரோகம் பண்ணினதினாலே இஸ்ரவேல் சபையின் மேலெல்லாம் கடுங்கோபம் வந்தது என்றும், தவறு செய்தவன் மட்டும் மடிந்து போகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாருக்கும் சொல்ல சொன்னார்கள்.  பின்பு பலிபீடம் கட்டினதின் காரணம் ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதி கோத்திரமும் அந்த தலைவர்களிடம் கூறுகிறார்கள்.  அதென்னவெனில் 

யோசுவா 22:22- 34 

தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதேயல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்க தகனபலிகளையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.

நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?

ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,

கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லையென்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சியாக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும், வேறொருபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.

அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.

 அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.

கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப்பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.

மேற்கூறிய வார்த்தைகள் தியானிக்கும் போது அதன் விளக்கத்தை கூறுகிறார்கள்.  எப்படியென்றால் இரண்டகத்தினாலோ.  துரோகத்தினாலோ நாங்கள் செய்ய வில்லை என்றும், மேலும் கர்த்தரை பின்பற்றாதபடிக்கு விலகுவதற்கோ, அதன் மேல் சர்வாங்க தகன பலியையோ, போஜன பலிக்காகிலும்,  சமாதானபலியை செலுத்துதற்காகிலும் அதை செய்யவில்லை என்றும், நாளைக்கு உங்கள் பிள்ளைகள் , எங்கள் பிள்ளைகளிடம், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும், உங்களுக்கும் என்ன என்று கேட்காதபடி, அதன் காரணம் எங்களுக்கும், உங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்திருக்கிறதால்; உங்கள் பிள்ளைகள், எங்கள்பிள்ளைகளிடம், கர்த்தரிடத்தில் உங்களுக்கு பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படாதிருக்க செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே, அவர்களும் ஆராதனை செய்யதக்கவர்கள் தான் என்று எங்களுக்கும்,உங்களுக்கும், நமக்கு பின்வரும் நம்முடைய சந்ததியார்க்கும்  நடுவே சாட்சி உண்டாயிருக்கும் படிக்கும் இதனை கட்டினோம் என்றார்கள்.  

இவ்விதமாக சென்னதால் ஆசாரியனாகிய பினெகாசும், சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவர்களின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாக இருந்தது.  அப்போது ஆசாரியனாகிய பினெகாஸ்,அவர்களிடம், கர்த்தருக்கு விரோதமான துரோகத்தை செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் என்பதையும் இப்போது அறிந்திருக்கிறேன்.  மேலும் இஸ்ரவேல் புத்திரரை கர்த்தரின் கைக்கு தப்புவித்தீர்கள் என்றான்.  பின்பு அவர்கள் இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு செய்தி அனுப்பினார்கள்.  அந்த செய்தியை கேட்டதினால் அது அவர்கள் பார்வைக்கு நன்றாகயிருந்தது.  பின்பு யுத்தத்திற்கு போவோம் என்ற பேச்சை விட்டு இஸ்ரவலின் தேவனை  ஸ்தோத்தரித்தார்கள்.  அல்லாமலும் கர்த்தரே தேவன் என்பதற்கு அந்த பீடம் நமக்குள்ளே சாட்சியாயிர்க்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும்,  காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.  

பிரியமானவர்களே இதன் விளக்கங்கள் நாம் ஆராய்ந்தறியும் போது, ஆவிக்குரிய சபைகளுக்கு, இரண்டகம் பண்ணவோ, தேவனுக்கு துரோகம் பண்ணவோ கூடாது என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.  மட்டுமல்லாமல் நாம் மட்டும் கர்த்தரை ஆராதித்தால் போதாது, நம் எல்லாருடைய உள்ளத்திலும் ஒரு சாட்சி உண்டாக வேண்டும்.  என்னவென்றால் நம்முடைய தலைமுறைகளுக்கு, கர்த்தரை பின்பற்ற நாம் வழிவகுக்க வேண்டும்.  மேலும் நம் பிள்ளைகள் கர்த்தருக்கு பயப்படுதலோடு வளர வேண்டும் என்ற ஆர்வமும், வாஞ்சையும் நமக்கு இருக்கவேண்டும். சபைக்குள்ளிலிலுந்து விட்டு சபைகளை பிரிக்கக்கூடாது, அது கிறிஸ்துவின் சரீரத்தை நாம் கிழிக்கிறோம். 

 மேலும் சபைக்குள்ளும், சங்கத்திற்குள்ளும், யாராவது ஒருவர் மறைமுகமாகவோ,அல்லது வெளிப்படையாகவோ, தவறுசெய்து வி்ட்டால், அது கர்த்தருக்கு மறைவான காரியமல்ல.  என்னவென்றால் ஒருவருடைய குறைவினால் கர்த்தர் முழு சபையையும் கோபத்தோடு வாதிக்கிறார் என்பதை தேவனுடைய வசனங்கள் மூலம் அறிய முடிகிறது.  அதனால் நாம் யாரும் தேவ சித்தம் இல்லாத எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது என்பதனை உணர்ந்து இந்நேரமே ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.