தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 12: 18

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆசீர்வாதத்தை, சகோதர சிநேகத்தை உடையவர்களாக இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வதும், நம்முடைய சத்துருக்களை கர்த்தர் நம்முடைய கையில் ஒப்புக்கொடுப்பதையும், அவ்விதம் ஒப்புக்கொடுத்து இளைப்பாறப்பண்ணுகிறதையும் குறித்து நாம் தியானித்தோம்.  

மேலும் நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 22:1- 6  

அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் அழைத்து,

அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள்.

நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.

இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.

ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.

இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம், லேவிக்கோத்திரத்தாருக்கு, இஸ்ரவேல் புத்திரர், தங்கள் நிலங்களிலுள்ள பட்டணங்களை, கர்த்தருடைய கட்டளை பிரகாரம் யோசுவா  பங்கிட்டுக்கொடுத்தபிறகு, யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதி கோத்திரத்தையும் கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொண்டு வந்தீர்கள்,  நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவிலும் என்சொற்படி செய்தீர்கள் என்றும், மேலும் இந்நாள் வரைக்கும் உங்கள் சகோதரரை கைவிடாமல், தேவனாகிய கர்த்தருடைய கட்டளையை காத்துக்கொண்டு நடந்தீர்கள் என்றும், ஆனால் இப்போதும் தேவனாகிய கர்த்தர், உங்கள் சகோதரருக்கு சொல்லியிருந்தபடியே அவர்களை இளைப்பாறபண்ணினார்; ஆகையால் மோசே சொல்லியிருந்தபடியே, யோர்தானுக்கு அப்புறத்திலே, உங்கள் காணியாட்சி தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்கு திரும்பி போங்கள் என்றான்.  

இவ்விதம் யோசுவா சொல்வதின் கருத்து என்னவென்றால், நம்முடைய வாழ்வில் சபையாகிய சகோதரரிடம், நாம் நடந்துக்கொள்ளவேண்டிய விதமும், அதனை பற்றிய விளக்கத்தை திருஷ்டாந்தத்தோடு கூறுகிறார்.  அல்லாமலும் 

1 தெசலோனிக்கேயர் 4: 9-10 

சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.

அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம், நாம் நம்முடைய சபையாகிய சகோதரரிடத்தில் அன்பில் பெருக வேண்டும். மேலும் சகோதர சிநேகத்தை குறித்து கர்த்தரின் வசனம் 

கொலோசெயர் 3:13 

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிப்போமாகில், சகோதரர்களாகிய நாமெல்லாரும் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதனை எப்போதும் கருத்தில் வைத்து, அவர்களுடைய குறைவில் நாம் அவர்களை உபசரிக்கிறவர்களாக இருக்க வேண்டும். மேலும் சகோதர  அன்பைக்குறித்து கர்த்தருடைய வசனம் 

1 யோவான்3:11-18 

நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

ஆதலால் மேற்க்கூறப்பட்ட வசவனங்கள் தேவ அன்பு எப்படி நம்முடைய உள்ளத்தில் எப்படி பூரணப்படும் என்பதனைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  அதன் திருஷ்டாந்தம் தான் யோசுவா, இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்கிறது இனி நீங்கள் யோர்தானின் அப்புறத்திலே உங்களுக்கு கொடுத்த காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்கு போங்கள் என்று சொல்கிறதை பார்க்கிறோம்.  இதன் கருத்து என்னவென்றால் அவர்கள் சகோதரர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து,அவர்களை இளைப்பாற பண்ணினதால் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு போகும்படி சொல்கிறார்.  இவைகள் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்திற்கு திருஷ்டாந்தம்.  

மேலும் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புக்கூர்ந்து,அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளை கைக்கொண்டு, அவரை பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், சேவிக்கிறதற்காக, உங்களுக்கு கற்பித்த கர்த்தரின் கற்பனையின்படியேயும், நியாயப்பிரமாணத்தின் படியேயும், செய்யும்படி மாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள்.  இவ்விதமாக  யோசுவா, கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி விட்டான்.  

பிரியமானவர்களே, மேற்க்கூறப்பட்ட கருத்துக்களை தியானித்து, நாமும் கர்த்தரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.