தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 4: 7 

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தரின் தகனபலியே நம்முடைய சுதந்தரம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய சரீரத்தின் அவயவத்தை வேசியின் அவயவமாக்கக்கூடாது என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். அவ்விதம் அவயவங்கள் கிறிஸ்துவுக்கு மட்டும் சொந்தமாக்கி கொள்ள வேண்டும்.  அவ்விதம் சொந்தமாக்கி கொள்வதற்காக,  நம்மில் இருக்கிற புறஜாதிகளின் கிரியைகள் எல்லாவற்றையும் வசனத்தால் (கிறிஸ்துவால்) முறியடித்து ஜெயம் பெற்று வாழவேண்டும்.  அவ்வித செயல்களுக்காக கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு, மோசேயையும், அதற்கு அடுத்ததாக யோசுவாவையும் வைத்து அவர் தம்முடைய வேலையைச் செய்கிறார். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 13:1-5 

யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது.

மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,

காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,

தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,

கிப்லியரின் நாடும், சூரியோதயப்புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,

        மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் நாம் தியானிக்கும்போது, கர்த்தர் யோசுவாவிடம், நீ வயது சென்று முதிர்ந்தவனுமானாய், ஆனால் நீ சுதந்தரித்துக் கொள்ள வேண்டிய தேசம் மகா விஸ்தாரமாயிருக்கிறது. இதனை கர்த்தர் சொல்கிறது எதற்கென்றால் நாம் அநேக வருஷமாய் கர்த்தரை அறிந்தும், சரியாக நம் உள்ளத்தில் மாற்ற வேண்டிய காரியங்களை மாற்றாமல் முதிர்வயதாகும் போதும், நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து தான் தீர்க்க வேண்டும் என்பதற்காக கர்த்தர் யோசுவாவை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அவர் சொல்கிறது யோசுவாவிடம் சுதந்தரித்துக் கொள்ளாத தேசம் 

யோசுவா 13:6-8 

லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.

ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார்.

மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.

       மேற்க்கூறப்பட்ட தேசங்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக துரத்துவேன் என்கிறார்.  நான் உனக்கு கட்டளையிட்டபடியே, இஸ்ரவேலுக்கு சுதந்தரமாக சீட்டுகளை மாத்திரம் போட்டு பங்கிட வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார். அல்லாமலும் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும், ரூபனியரும், காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதனை கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்கு கொடுத்தான்.  

மேலும் யோசுவா யோசுவா 13:9-11-ல் 

அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதெபாவின் சமனான பூமி யாவையும்,

எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,

கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,

 எழுதப்பட்டுள்ள சமனான வெளிகள், பட்டணங்கள், நாடுகள், மலைகளையும், அஸ்தோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்து துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் கொடுத்தான்.  இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.  

இதன் கருத்துக்களை நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேலரால் துரத்திவிடபடாதிருந்தவர்கள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும், நம்மை வளர விடாதபடி, மறைவாக இருக்கிறார்கள் என்பதனை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதென்னவெனில் அநேக பாரம்பரிய வாழ்க்கைகள் நம்மை தொடரந்து பிடிக்கிறது.  ஆனால் அநேக பேரால் அதனை உணர்ந்துக்கொள்ள முடிய வில்லை.  காரணம் ஆவிக்குரிய கண்கள் குருடாக இருக்கிறதால்தான் என்று நாம் உணர்ந்து கொண்டு, அது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.  அது என்னவென்றால் உலக வழிபாடுகள், உலக சிற்றின்பங்கள், திருமணங்களில் சில தவறான பாரம்பரிய செயல் முறைகள், நாள் பார்க்குதல், குறி சொல்லுதல், பிள்ளை பேறுக்கப்புறமாக சில வழிமுறைகள் கட்டாயமான முறைகள் என்று நினைத்துக்கொண்டு கடமைகள் என்று தேவ வசனத்துக்கு அப்பாற்ப்பட்ட காரியங்களை செய்தல், இன்னும் இவ்விதம் அநேக தவறான கருத்துக்களை இருதயத்தில் பதித்து வைத்து, கிறிஸ்துவுக்குரிய இடத்தை மேற்க்கூறப்பட்ட காரியங்களுக்கு ஒப்புக்கொடுத்தல் போன்ற அக்கிரமங்களால் கறைப்படுதல், இப்படிப்பட்ட காரியங்கள் இஸ்ரவேலருக்குள்ளும் இருக்கிறது என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறது.  

ஆனால் அதில் லேவியின் கோத்திரத்துக்கு அதில் சுதந்தரம் கொடுக்கவில்லை.  ஏனென்றால் கர்த்தர் சொன்னபடியே அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.  ஆதலால்  லேவிக்கோத்திரத்தார் எல்லாவற்றையும் விட்டு விட்டு கர்த்தருடைய பலிகளில் மாத்திரம் அவர்கள் விருப்பமாயிருந்து, அவருக்காய் தங்களை முழுமையும் ஒப்புக்கொடுக்கிறதால், கர்த்தர் அவர்களுக்கு ஆசாரியத்தும் கொடுத்து, அவர்களில் வசிக்கிறவராக இருந்து ஜனங்களை நல் வழிபடுத்தி, சீர்திருத்துகிறவராயிருக்கிறார்.  

நாமும் கர்த்தரின் பலிகளில் மாத்திரம் நாம் பிரியமாயிருக்கும்படிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.