தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 6:12

மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை புறஜாதியின் கிரியைகளால் கலக்காதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் போஜனபதார்த்தங்களை புசிப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  ஏனென்றால் போஜனபதார்த்தங்களால் நம்முடைய ஆத்துமா நன்மையும்பெற்றுக்கொள்ளும், தீமையும் அடையும்.  அதற்கு காரணமென்னவென்றால், கிறிஸ்துவோடு உடன்படிக்கைப்பெற்றுக்கொண்ட நாம், பழைய பாரம்பரிய வாழ்க்கையோடு கலந்து போஜனபதார்த்தங்களை புசிக்கக்கூடாது.  அல்லது அவர்கள் போஜனங்களில் பங்குக்கொள்ளவும் கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை நமக்கு சொல்கிறது. ஆனால் நாம் ஜாக்கிரதையாக இல்லாமலிருப்போமானால் சத்துரு நம்மை யார் மூலமாகவோ வஞ்சித்து விடும். அப்போது அது நமக்கு தீமையாக தீரும்.  மேலும் கர்த்தருடைய வாரத்தைக்கு கீழ்படிந்து நடப்போமானால் அது நமக்கு நன்மையாக வந்தடையும்.   

அப்படியாக எமோரியராகிய அவர்கள் யோசுவாவிடமும், இஸ்ரவேல் புத்திரரிடமும் தந்திரமாக வந்து அவர்களை வஞ்சித்துவிட்டதால் அவர்கள் போஐனங்களை இஸ்ரவேல் புத்திரர்கள் வாங்கி புசித்ததுமல்லாமல் யோசுவா அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டான்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 9:16-20  

அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம்நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.

சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக்கூடாது.

கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்ட மூன்றாம் நாளில், அவர்கள் அயலார் என்றும், மற்றும் அவர்கள் இஸ்ரவேலர் நடுவில் குடியிருக்கிறவர்களென்றும் கேள்விப்பட்டார்கள்.  இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களில் வந்து சேர்ந்தார்கள். அந்த பட்டணமாவது கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.  சபையின் பிரபுக்கள் அவர்களோடு ஆணையிட்டுக்கொடுத்தபடியினால் அவர்களை சங்கரிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேல் சபையார் பிரபுக்கள்மேல் முறுமறுத்தார்கள்.  அப்போது இஸ்ரவேல் பிரபுக்கள் சொன்னது நாங்கள் அவர்களுக்கு கர்த்தர் பேரில் ஆணையிட்டபடியால் அவர்களை தொடக்கூடாது.  ஆனால் கர்த்தர் கோபம் நம்மேல் வராதபடி நாம் அவர்களை உயிரோடே வைத்து ஒன்று செய்வோம்.  

அதென்னவென்றால் யோசுவா 9: 21-23   

பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?

இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது அவர்களை உயிரோடுவைப்பதற்காக,  பிரபுக்கள் செய்வோம் என்று சொன்னது,  அவர்களை கர்த்தரின் சபைக்கு விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைப்போம் என்று சொன்னதினால், யோசுவா அவர்களை அழைத்தனுப்பி  நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் இந்த வேலைகளை செய்து பணிவிடைகாரராயிருப்பீர்கள்.  இந்த ஊழியம் உங்களை விட்டு நீங்காது என்று சொன்னான்.  

அவர்கள் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்து குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும், உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு கட்டளையிட்டது நிச்சயமாய் அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன் நிமித்தம் உங்களுக்கு பயந்து இந்த காரியத்தை செய்தோம்.    இப்போதும் நாங்கள் உமது கையிலிருக்கிறோம் .  உமது பார்வைக்கு நியாயமும், நன்மையுமாய்  தோன்றுகிறதை எங்களுக்கு செய்யும்.  அப்படியே யோசுவா அவர்களுக்கு செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களை கொன்றுப்பொடாதபடி அவர்களை இவர்கள் கைக்கு தப்புவித்தான்.  அந்நாளில் அவர்களை சபைக்கும்,கர்த்தர் தெரிந்துக்கொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவு மாக்கினான். 

பிரியமானவர்களே மேற்க்கூறிய கருத்துக்கள் என்னவெனில் இப்படிதான் அநேக இஸ்ரவேலராகிய அபிஷேகப்பட்டவர்கள் தங்கள் சூழ்நிலைக்கேற்றபடி தங்கள் சிநேகிதர்களை மாற்றிக்கொள்வார்கள்.  அதன் காரணம் அவர்களில் முழுமையான ஒரு இரட்சிப்பு இல்லாத காரணத்தால் அநேகர் மாம்ச சிந்தைக்குட்பட்டிருக்கிறார்கள்.   கர்த்தரின் ஊழிய காரர்களும் அவ்விதம் மாம்ச கிரியைகளில் இருக்கிறார்கள்.  அதனால் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தி யோசுவாவை வைத்து கர்த்தர் விளக்கி காட்டுகிறார்.  பாரம்பரிய செயல்களையும் அநேகர் விடாமல் இருக்கிறார்கள்.   

ஆதலால் பிரியமானவர்களே  நம்முடைய ஆத்துமா வஞ்சிக்கபடாதபடி தேவனிடத்திலிருந்து  ஞானத்தை பெற்றுக்கொண்டு, விவேகத்தை பேணிக்கொள்ள வேண்டும்.  யோசுவா அனுப்பிய வேவுக்காரர்கள்  ராகாப் என்ற வேசிக்கு இடம் கொடுத்ததால் அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவில் வஞ்சிக்கிறாள்.  அது போல புறஜாதிகளுக்கு இடம் கொடுத்து உடன்படிக்கை செய்துக்கொண்டதால் இஸ்ரவேலை ஜாதிகள் வஞ்சிக்கிறார்கள். 

ஆகையால்  அவ்விதம் நாம் ஜாதிகளால் வஞ்சிக்கப்படாதபடி ஜாக்கிரதையாக இருந்து நம்மை தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.