தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 7:26

பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு ஒரே ஒரு ஆசாரியர், பூரண கிருபையுள்ளவராக  என்றென்றைக்கும் மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய பாவசாப கட்டுகள் அகற்றப்பட நாம் பாவ மன்னிப்பாகிய மீட்பை பெற்றுக் கொள்ளும்படியாக கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவமாகிய அழுக்கை கழுவி அவருடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டு, அதற்கு ஒப்பனையாக ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, பின்பு நம் ஆத்துமாவின் சாபகட்டுகள் அறுக்கப்பட, தேவ எக்காள சத்தமாகிய தேவ வசனம் உள்ளத்துல் கேட்கப்பட்டு, பின் துதித்தலும், ஸ்தோத்திர சத்தமும், நம் உள்ளத்தில் நம்முடைய ஆசாரியராகிய கிறிஸ்துவால் எழும்ப வேண்டும்.  அவ்விதம் எழும்பி தேவனுக்கு மகிமையும், ஆராதனையும் செலுத்தும் போது, கட்டுகளை கர்த்தர் அறுக்கிறார் என்பதற்கு திருஷ்டாந்தமாக, கர்த்தர் யோசுவாவை வைத்து, முன்பில் உள்ள எரிகோவை கடந்து போகப் பண்ணுகிறார் என்று தியானித்தோம்.  எரிகோ கோட்டை என்பது சாபக்கட்டுகளுக்கு திருஷ்டாந்தம்.  இவ்விதம் கர்த்தர் யோசுவாவிடம் சொன்னது போல், யோசுவா ஜனங்களுக்கு கட்டளையிட்டான்.  

அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 6:6-15 

அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.

யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது.

எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்சென்றது.

யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.

அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத் தங்கினார்கள்.

யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.

தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.

இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.

ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, நூனின் குமாரனாகிய யோசுவா, ஆசாரியரை அழைத்து உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள், தொனிக்கும் ஏழு எக்காளங்களையும், ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக பிடித்துக்கொண்டு போகக் கடவர்கள்.  கர்த்தர் சொன்னப்பிரகாரம், யுத்தசன்னதரானவர்கள் பெட்டிக்கு முன்பாக பட்டணத்தை சுற்றி கடந்து போகவும், தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் பிடித்திருக்கிறவர்கள், கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்.  கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி அவர்களுக்கு பின்னாக வந்தது. 

ஆனால் யோசுவா ஜனங்களிடம் சொல்லியிருந்தான் எப்படியெனில் ஆர்ப்பரியுங்கள் என்று சொல்லும் போது மட்டும் ஆர்ப்பரிக்க வேண்டும்.  மற்ற நேரத்தில் ஒரு பேச்சும் பேசக்கூடாது என்றும், அப்படியே யோசுவா அதிகாலையில் எழும்பும் போது ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியை சுமந்துக் கொண்டு போனார்கள்.  ஏழு ஆசாரியர்கள் ஏழு எக்காளங்களை பிடித்துக்கொண்டே, பெட்டிக்கு முன்னே  அதனை ஊதிக்கொண்டு போகவும், யுத்தசன்னதரானவர்கள் அவர்களுக்கு முன்பாக நடக்கவும், பின் தண்டு கர்த்தரின் பெட்டிக்கு பின்னாக சென்றது.  இவ்விதமாக ஆறு நாளும் செய்து, ஏழாம் நாளில் அதிகாலமே கிழக்கு வெளுக்கும் போது எழுந்திருந்து, அந்த பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள். ஏழாம் தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில் யோசுவா ஜனங்களை நோக்கி ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.  

பிரியமானவர்களே இதனை வாசிக்கும் போது, நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால், நம்முடைய சரீரம் ஒரு சாபப்பட்டணமாக இருந்தால், அதிலிருந்து நாம் யாவரும் விடுதலை ஆக வேண்டும்.  அவ்விதம் விடுதலையாகவேண்டுமானால் கிறிஸ்துவின் வசனம் உள்ளத்தில் தொனிக்கவேண்டும்.  எப்போதும் நம்முடைய ஆசாரியராக கிறிஸ்து நம்மோடு எல்லா காரியங்களில் முன்பாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும்.  ஏழு ஆசாரியர்கள் என்று எழுதப்பட்டிருப்பது,ஆசாரியர் ஒருவரே, அவர் பூரண கிருபையுள்ளவராயிருக்கிறார்.  நம் சாபங்கள் அகற்றப்பட பூரண கிருபையோடு உள்ள நம்முடைய கிறிஸ்துவை அல்லேலுயா என்ற சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும்.  

அப்போது அந்த பட்டணமாகிய நம்முடைய ஆத்துமா, நம் கையில் கர்த்தர் ஒப்புக்கொடுக்கப்படுகிறது.  அதன் பின் நாம் விரும்பாத காரியங்களை செய்ய அது துணியாது.  ஆனால் கர்த்தரின் வார்த்தைகளை கேட்பதிலும், கீழ்படிவதிலும் உண்மையாக விளங்கும்.  அல்லாமலும் தேவையற்றவற்றை நம்மளிலிருந்து அகற்றும்.  இவ்விதம் நம் வாழ்வில் மாற்றங்கள் வரும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.