தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 பேதுரு 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சொந்த பிள்ளைகள் ஆக வேண்டுமானால் ஜலத்தினால் மூழ்கி ஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் அறுவடைக்காக தேவன் திருஷ்டாந்தமாக விளக்கியது தான் யோசுவாவை வைத்து இஸ்ரவேல் புத்திரரை யோர்தானை கடக்க வைக்கிறார்.  இது ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு திருஷ்டாந்தமும், எப்படி ஞானஸ்நானத்தினால் நம்முடைய ஆத்துமா நல்ல போராட்டம் போராடி, விசுவாசம் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள வேணடும் என்பதனை கர்த்தர் விளக்கி காட்டுகிறார். எப்படியென்றால் முதலாவதாக நாம் கர்த்தராகிய இயேசுவின் மேல் எப்படி பற்றுதலாயிருப்போம் என்றால், கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.  

என்னவெனில் நாம் அவருடைய ஜனமாயிருப்போமானால், அவர் நம்முடைய தேவனாயிருப்பார். மேலும் தாவீது பாடுகிறார் சங்கீதம் 23-ல் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.  அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு போய் விடுகிறார்.  அல்லாமலும் நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள் என்றால், அவர் நம்முடைய மேய்ப்பராயிருக்கிறார்.  அதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார், நானே நல்ல மேய்ப்பன் 

யோவான் 10:11-16  

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.

கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் அவர் நமக்காக ஜீவன் தந்து நம்மை எல்லா இக்கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கி இரட்சிக்கிறவர்.  அதை குறித்து தான் இயேசு கிறிஸ்து சொல்கிறார் நான் உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி  வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தேன் என்று சொல்கிறார்.  அவரை கண்ட யோவான் ஸ்நாபகன் கர்த்தருடைய வார்த்தையாக  யோவான்1:29-ல், இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான்.  என்னவென்றால் நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாயிருக்கிறபடியினால், அவருடைய தொழுவத்தில் நமக்கு மேய்ச்சல் உண்டு.  அந்த தொழுவம் தேவ சபை,  அதின் மேய்ச்சல் என்பது அவருடைய சத்திய வார்த்தை.  

அந்த வார்த்தையானது ஆவியாயும், ஜீவனாயும் நம்முடைய உள்ளத்தில் பிரவேசித்து, நாம் உலகத்தில் பாவியாக பிறந்து, பாவியாக வாழ்ந்து, பாவிகளாக வளர்ந்து, தேவனுக்கு பிரியமற்ற காரியங்களை நாம் செய்து, பாவம் பூரணமாகும் போது, மரித்த நம்முடைய ஆத்துமாவை அவருடைய வார்த்தையை அனுப்பி உயிர்ப்பித்து:  நாம் பாவிகள் என்பதை உணர்ந்துக்கொள்ளும்படி, நம்முடைய கண்களை திறந்து, நம்முடைய ஒவ்வொரு பாவங்கள் மீறுதல்கள் அக்கிரமங்கள் இவைகளை நமக்கு உணர்த்தியும், வெளிப்படுத்தியும், அந்த பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறார் என்பதனை திருஷ்டாந்த படுத்தி அவர் யோர்தான் நதியில் இறங்கி, யோவான் ஸ்நாபகனால் அவர் ஞானஸ்நானம் எடுத்து கரையேறும் போது ஆவியானவர் புறாவை போல் அவர் மேல் இறங்குகிறதும், அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம், இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்த சத்தம் கேட்கிறது, என்னவென்றால், நாம் அவ்விதம் அவர் காட்டுகிற மாதிரி பிரகாரம், நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நீதிக்கு பிழைக்கும்படியாக செய்தார் என்பது குறிப்பிடதக்கது.  

அல்லாமலும் அவர் சொல்கிறார் இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.  அதன்பிறகு தான் அவரை தேவன் சிலுவையில் ஒப்புக்கொடுக்கிறார்.  அங்கு அவர் மரித்து, பின்பு அவர் உயிர்தெழுந்தார்.  இவ்விதமாக உயிரெதெழுந்த கிறிஸ்துவை நாம் விசுவாசித்து, மனந்திரும்பி, பாவ அறிக்கை செய்து, அவருடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து, இப்படி நம்மை பரிசுத்தம்பண்ணி நம்முடைய பாவங்களுக்காக நாம் ஜலஸ்நானத்தினால் அவரோடு மரித்து, பின் அவருடைய ஆவியினால் நாம் எழும்பும் போது, அவர் ஜீவன் நமக்குள் பிரவேசிக்கிறது.  அப்போது அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டு அவருடைய பிள்ளைகளாகிறோம்.  அவர் நம்முடைய பிதாவாகிறார்.  அவ்விதமாக அப்பா பிதாவே என்று கூப்பிடதக்க புத்திரசுவிகாரத்தின் ஆவியை தருகிறார். ஆதலால் ஞானஸ்நானத்தினாலே அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு,அவருடைய உயர்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்படுகிறோம். 

இவ்விதம் நாம் அவரோடு உடன்படிக்கை எடுக்கும் முன்பாக பல போராட்டங்கள் நமக்கு வந்து கூடும்.  அதனை எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தான் கர்த்தர் யோர்தானை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

இவ்விதமாக அவருடைய சொந்த பிள்ளைகளாக ஆகும்படியாக சகலத்திற்கும் கீழ்படிந்து ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.