தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 11:28-30

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்குள்ளாக கிறிஸ்து தீர்க்கதரிசியானவராக வெளிப்படுகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசியாக என்றென்றைக்கும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று தியானித்தோம்.  

ஆனால் மோசே மரித்தப்பின் கர்த்தர் யோசுவாவிடம் என் தாசனாகிய மோசே மரித்து போனான்.  இப்பொழுது  நீயும், இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானை கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்கு போங்கள், நான் மோசேக்கு சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்கு கொடுத்தேன்.  வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசமனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற  திசையான பெரிய சமுத்திரம் வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.  இவ்விதம் கர்த்தர் கானான் தேசத்தின் எல்லைகளை குறித்து காட்டுகிறார்.  அல்லாமலும் கர்த்தராகிய இயேசுவை ஒவ்வொருவரும் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அவ்விதம் இந்த தேசத்தை சுதந்தரித்தால் 

யோசுவா 1:5,6  

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் கர்த்தர் நம்மை நடத்தி செல்வது மட்டுமல்ல, நாம் பெற்றுக்கொண்ட இந்த தேசம் நம்முடைய ஆதி பிதாக்களுக்கு கர்த்தர் ஆணையிட்டுக்கொடுத்த தேசமும், மற்றும் நாம் மற்றவர்களுக்கும் பங்கிட்டு கொடுப்பாய் என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் கர்த்தர் சொல்வது கர்த்தர் மோசேயிடம் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கும்படி மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு என்று சொல்கிறார்.  மேலும் நாம் போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துக்கொள்ளும்படிக்கு நியாயபிரமாண கற்பனைகளை விட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக என்கிறார்.  மேலும் நியாயபிரமாணம் வாயை விட்டு பிரியாதிருப்பாயாக என்றும், அதில் எழுதியிருக்கிற ஒவ்வொன்றின் படி நடந்து, கவனமாயிருந்து இரவும் பகலும் தியானித்துக்கொண்டிருப்போமானால், அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துக்கொள்ளுவாய்.  

அதனைக்குறித்து சங்கீதம் 1:1-4  

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்து என்னவென்றால் கர்த்தருடைய வேதத்தில் இரவும், பகலும் தியானமாயிருக்கிறவர்களுடைய வாழ்க்கையில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  அதனால் கர்த்தர் சொல்கிறார்; பலங்கொண்டு திடமனதாயிரு; கலங்காதே, திகையாதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.  அவ்விதமாக கர்த்தர் யோசுவாவிடம் சொன்னபிறகு, யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி சில காரியங்கள் சொல்கிறான்.  அதென்னவென்றால் நீங்கள் பாளயத்தை உருவ நடந்து போய், ஜனங்களை பார்த்து உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம் பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு சுதந்தரிக்க கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானை கடந்து போவீர்கள் என்று சொல்ல சொன்னார் என்றான்.  

இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் அந்த நல்ல கானான் தேசமாகிய  கிறிஸ்துவை சுதந்தரிக்க வேண்டுமானால் கரை புரண்டு வருகிற யோர்தானை கடக்க வேண்டும்.  என்னவெனில் யோர்தான் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய போராட்டத்தின் வழியாக தான் போகமுடியும்.  அதென்னவெனில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றால் தான் நாம் ஒரு மறு பிறப்பு ஆகிறோம்.  இந்த மறுபடி பிறப்புக்கு அநேகர் எதிராக வருவார்கள்.  நாம் எப்படி கடப்போம் என்ற சந்தேகங்கள் நமக்குள் எழும்பும்.  அநேகர் சோர்ந்து போவார்கள்.  ஆனால் நாம் ஒன்று நினைக்க வேண்டும் இந்த யோர்தானை கடக்கும் போது, நம்முடைய ஆசாரியனும், பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்துவும் நம்மோடு உண்டு என நினைக்க வேண்டும்.  என்ன என்றால் இஸ்ரவேலர் யோர்தான் கடக்கும் போது ஆசாரியர்கள் கூட உண்டு நம்முடைய கன்மலையாகிய கிறிஸ்துவும்  உண்டு. 

இதனை குறித்து யோசுவா 3:17 

சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை தெளிவுப்படுத்தவே  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 

மத்தேயு 3:13-17  

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மேற்க்கூறிய வசனங்களை நாம் புரிந்துக்கொண்டு யோர்தானை கடப்போம்.  அப்போது அவரை நேசகுமாரன் என்கிறார்.  இவ்விதமாக கிறிஸ்துவை சுதந்தரிக்கும் படி நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும்  யோசுவா: ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரையும் நோக்கி, தாசனாகிய மோசே உங்களுக்கு கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள் என்றும், கர்த்தர் நீங்கள் இளைப்பாறும்படி இந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்தார் என்பது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம். இதன் விளக்கங்கள் கர்த்தருக்கு சித்தமானால் கிருபையால் அடுத்த நாளில் தியானிப்போம். 

ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய ஆத்துமா இளைப்பாறும் இடத்தை கண்டு பிடித்து, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை சுதந்தரிக்கும்பொருட்டாக, கர்த்தராகிய இயேசுவை தரித்துக்கொண்டு, இரட்சிப்பை சதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.