தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 21: 13

வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படும்படியாக, இஸ்ரவேல் சபை நமக்கு திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்து, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே நித்திய சுதந்தரம் பெற்றுக்கொள்ள முடியும் என்று தியானித்தோம்.  அன்றியும் தேவனுடைய மனுஷனாகிய மோசே, தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது, கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்தது, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது.  

இதனை நாம் தியானிக்கும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்மிடத்தில் எவ்விதத்தில் பிரசன்னமாகிறார் என்றால் பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே என்பது யூத புஸ்தகத்தில் 14,15 வசனங்களில் கிறிஸ்து நம்மிடத்தில் வருகிறதை ஏனோக்கு முன்னறிவித்தார்.  

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,

தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

அல்லாமலும் அவருடைய வலதுகரமானது கிறிஸ்துவும், அவரிடத்திலிருந்து அக்கினிமயமான பிரமாணம் புறப்பட்டது.  அவர் மெய்யாகவே ஜனங்கள் எல்லாரையும் சிநேகிக்கிறார்.  அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தையினால் போதனையடைவார்கள்.  இவ்விதம் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்தார் என்றால் இது இஸ்ரவேல் சபையாகிய மணவாட்டி சபைக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

ஆனால் மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தை கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்கு சுதந்தரமாயிற்று.  ஆனால் ரூபன் சாகாமல் பிழைப்பானாக;அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.  அவன் யூதாவை குறித்து, கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்ப சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான்.  லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சை பார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம் பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.  

லேவியைக்குறித்து சொல்வது ஆசாரியத்துவ ஊழியமும், தீர்க்கதரிசனமும், நியாயத்தீர்ப்பும்.  இங்கு எல்லாம் கிறிஸ்து வருகிறார் என்பதன் திருஷ்டாந்தம். அவர்கள் உலகத்தை முற்றிலும் விட்டவர்கள் என்பதும், உடன்படிக்கையை காக்கிறவர்கள் என்பதும், யாக்கோபுக்கும், இஸ்ரவேலுக்கும் பிரமாணத்தை போதிக்கிறவர்களும், கர்த்தருடைய சந்நிதிஸ்தானத்திலே தூபவர்க்கத்தையும், கர்த்தருடைய பலிபீடத்தின் மேல் சர்வாங்க தகனபலிகளையும் இடுவார்கள்.  இது கிறிஸ்து இவையெல்லாம் நமக்காக செய்கிறார் என்பதன் திருஷ்டாந்தம். 

அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைகிரியையின் மேல் பிரியமாயிரும். அவனை பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கி விடும் என்றான்.  இவை கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை கர்த்தர் நிர்மூலம் பண்ணுகிறவர் என்றும், நாம் கிறிஸ்துவின் சம்பத்தும் (நித்திய ஜீவன்) என்பதும் புரிய வேண்டும்.  

அல்லாமலும் ரூபன் சாவாமல் பிழைப்பானாக என்பது அவன் இரட்சிப்பை சுதந்தரிப்பான் என்பதும், அதன் மூலம் ஜனனம் பெருகும் என்பதும் திருஷ்டாந்தத்துக்குரியது.  அதனைக்குறித்து முந்தின சில நாட்களுக்கு முன் நாம் தியானித்த கருத்து என்னவெனில் ரூபன் கோத்திரம் யோர்தானுக்கு இக்கரையிலுள்ள கனானை சுதந்தரித்துக்கொண்டது.  ஆதலால் ரூபன் என்றென்றைக்கும் பிழைத்திருப்பான் என்பதும், அவன் கிறிஸ்துவினால் பெருகுவான் என்பதும் தெரியவருகிறது.  இதுவும் கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்.  

அடுத்தது யூதாவை குறித்து, கொடுத்த ஆசீர்வாதம் என்னவென்றால் சத்துருக்களால் நெருக்கப்பட்டாலும், கர்த்தர் அவர்களை சத்துருவின் கையலிருந்து விடுவித்து இரட்சிக்கிறவர் என்பதும், அதில் யூத கோத்திரத்து சிங்கம் பிறப்பார் என்பதும், அவர் உன்னதமான தேவனுடைய குமாரன் என்பதும், அதனால் அவர் செய்த அற்புதங்களையும், அடையாளங்களும், அவர் கிறிஸ்து தான் என்பதை அறிந்தவர்களும் கண்டவர்களும்,கேட்டவர்களும் அவர் இஸ்ரவேலுக்கு ராஜாவாக வீற்றிருப்பார் என்பதை அறிந்தவர்களும், மற்றும் அவர் அதிகாரமுடையவராக தேவ வசனத்தை பிரசங்கித்ததாலும், பொறாமைக்கொண்டவர்கள் அவரை துன்பப்படுத்தும் போது,கர்த்தர் அவரை சத்துருக்கள் கையிலிருந்து நீங்கலாக்கி இரட்சித்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடதக்கது.  

இவ்விதம் மேலேக்கூறப்பட்ட மூன்று கோத்திரங்களும் கிறிஸ்து உயர்த்தப்பட திருஷ்டாந்தமாகக் கொடுக்கபடுகிறது.  ஆதலால் பிரியமானவர்களே நாம் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படுவதற்கு இவையெல்லாம் நமக்கு திருஷ்டாந்தம் . இவ்விதமாக நாம் கர்த்தரின் சந்நிதியில் கிறிஸ்துவினால் இரட்சிப்பை சுதந்தரிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.