தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 2: 8

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சமூகத்தை விட்டு விலகாமல் நம்மை பாதுகாக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரிடத்தில் முழுமையான விசுவாசம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று தியானித்தோம்.   ஏனென்றால் ஆரோன் ஓர் என்னும் மலையில் வைத்து மரித்து கர்த்தர் சொன்னது போல் அடக்கம்பண்ணப்படுகிறான்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 33:40-56 

அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.

ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.

பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.

ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.

அந்த மேடுகளை விட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.

தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே பாளயமிறங்கினார்கள்.

அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.

அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.

யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.

அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.

மேலும் ஆரோன் மரித்த அந்நாட்களில் கானான் தேசத்தின் தென் திசையில் குடியிருந்த  கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதை கேள்விப்பட்டான்.  பின்பு இஸ்ரவேலர்  ஓர் என்னும் மலையை விட்டு புறப்பட்டுப் போய் சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள். மேலும் மேற்க்கூறப்பட்ட படி பாளயமிறங்கினார்கள். இவ்விதம் பாளயமிறங்கிக்கொண்டு வரும்போது, கர்த்தர் மோசேயிடம் நீ இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்ல வேண்டுவது என்னவென்றால் நீங்கள் யோர்தானை கடந்து கானான் தேசத்தில் போய் சேரும் போது, கானான் தேசத்து குடிகளையெல்லாம் துரத்தி விட்டு, அவர்களுடைய எல்லா சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலம் பண்ணி, அங்கே குடியிருக்கும்படி, அந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்றார்.  

இதனை நாம் தியானிக்கும் போது கானானியர், விக்கிரக தெய்வங்களை சேவித்ததும், சிலைகளை நமஸ்கரித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.  கர்த்தர் நமக்கு அதனை எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம், அந்த தேசம் நம்முடைய உள்ளம்.  அங்கு பலதரப்பட்ட ஜாதிகள் கிரியை செய்து நம்மை விக்கிரகங்களுக்கு அடிமையாக்கி கொள்கிறோம்.  ஆனால், நாம் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது கர்த்தர் அதனை நம் உள்ளத்திலிருந்து துரத்துகிறார்.  

மேலும் சீட்டுப்போட்டு தேசத்தை சுதந்தரமாக்குகிறார்கள்.  அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்கு கொஞ்ச சதந்தரமும் கொடுக்கக் கடவீர்கள் என்றும், அவரவர்க்கு சீட்டு விழும் இடம் எதுவோ அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்.  உங்கள் பிதாக்களின் கோத்திரங்களின் படியே சுதந்தரம் பெற்றுக்கொள்வீர்கள்.  நம்முடைய பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு வைத்த சுதந்தரம் தேவனுடைய வீடும், அவருடைய ஆஸ்தியாகிய கிறிஸ்துவும்.  

அன்றியும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த பின்பு, அவருடைய வஸ்திரங்களை பங்கிட்டு அவருடைய உடையின் பேரில் சீட்டு போட்டார்கள் என்று தேவனுடைய வசனம் சொல்கிறது. மேலும் அவருடைய வஸ்திரத்தில் வல்லமை உண்டாயிருந்தது.  அல்லாமலும் அவருடைய உடை என்பது துதியாக இருக்கிறது.  இவ்விதமான செயல்கள் தேவனால் நிகழ்கிறது காரணமென்னவென்றால் அவருடைய வல்லமையால் பகையாகிய பிரிவினையாகிய நடு சுவர் தகர்க்கப்படுகிறது.  அப்போது துதி, ஸ்தோத்திரம் நாவில் எழும்புகிறது.  இவ்விதம் பாடு மரணத்தோடு நம் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார்.   

மேலும் வேத வார்த்தைகளின் பிரகாரம் சீட்டு போட்டால், அதன் காரியம் கர்த்தரால் வாய்க்கிறது என்பது தெரிந்துக்கொள்ளலாம். அதைதான் 

நீதிமொழிகள் 16:33 

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

அல்லாமலும், சீட்டு போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும் என்பது நீதிமொழிகள் 18:18-ல் கூறப்படுகிறது.  

இதனை பார்க்கும் போது பட்சபாதம் இல்லாமையை காட்டுகிறது.மேலும் கர்த்தர் சொல்வது  என்னவென்றால் நம் உள்ளத்தில் இருக்கிற ஜாதிகளின் கிரியையை மாற்றாமல் அவர்களை விட்டுவைப்போமனால்  அவைகள் கண்களில் முள்ளுகளும், விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நம்முடைய உள்ளத்தை துன்பங்களினால் உபத்திரவப்படுத்துவார்கள்.  அல்லாமலும் அவர்களுக்கு செய்ய நினைத்ததை உங்களுக்கு செய்வேன் என்றார்.  இதன் அர்த்தம் அவர்களை துரத்துவது போல, நம்மையும் அவர்களை போல் தேவ சமூகத்திலிருந்து துரத்திவிடுவார். 

ஆதலால் பிரியமானவர்களே கர்த்தர் அவர் சமூதத்திலிருந்து நம்மை தள்ளிவிடாமல் கர்த்தர் சொற்படி நடக்க ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.