தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 116: 13

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம், மிகவும் பரிசுத்தப்பாத்திரமாக  கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய விசுவாச யாத்திரையில் கர்த்தரை முழு இருதயத்தோடு விசுவாசியாமற் போனால் நம்மை அவர் பட்சபாதம் இல்லாமல் நியாந்தீர்க்கிறவர் என்றும், அது ஆத்தும மரணத்திற்கு காரணமாயிருக்கிறது என்பதனை குறித்து தியானித்தோம்.  அவ்விதம் கர்த்தர் கட்டளையிட்டது போல் ஆரோன் மரித்து ஓர் என்னும் மலையில் அடக்கம் பண்ணப்படுகிறான்.  

அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவெனில் 

எண்ணாகமம் 21:1-4  

வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம்பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.

கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.

அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிப்பது என்னவென்றால் வேவுக்காரர் காண்பித்த வழியாய் இஸ்ரவேலர் வருகிறார்கள் என்பதை தெற்கே வாசம் பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்ட போது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனான்.  அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரைப் பணிந்துக்கொண்டு, இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களை, அவர்கள் பட்டணங்களை சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.  

அவ்விதம் இஸ்ரவேலின் சத்தத்திற்கு  கர்த்தர் செவிக்கொடுத்து கானானியரை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.  அப்பொழுது அவர்கள் பட்டணங்களையும் ஒப்புக்கொடுத்து, அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள். இவை எதற்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் கானானியன் உள்ளத்திலிருந்து சங்காரம் பண்ண வேண்டும்.  அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப்போகும்படி  சிவந்த சமுத்திரத்தின் வழியாய் பிரயாணம் பண்ணினார்கள்.  அந்த வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவானார்கள்.  

மேற்க்கூறிய  வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் கானானியனை அழித்தால் தான் கர்த்தரின் சபை எருசலேமுக்குள் வரும் என்பதனை அறிந்த தேவன் இஸ்ரவேலரை சுற்றி வரபண்ணினார்.  அவ்விதம் வந்தால் கானானியன் வழியில் எதிரிடுவான் என்பதனை முன்கூட்டி அறிந்த தேவன் அவர்களை வேவுக்காரர்களை வைத்து அந்த வழியாக போக பண்ணுகிறார்.  இப்படி திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் இவ்விதமாக நம்முடைய உள்ளத்தில் இருக்கும் துர்கிரியைகளை மாற்றும்படியாக நம்முடைய வாழ்க்கையிலும் சில துன்பங்கள் சூழ வைத்து, நம்மை ஒன்றுகூட நம்மை நாமே சோதித்தறிந்து நம்மை சீர்படுத்தி நிலைப்படுத்தும்படியாக சில காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து, நம்மை கர்த்தரண்டையில் நாம் இருந்ததை விட அதிகமாக ஐக்கியப்படுத்துவதற்காகவும் அப்படி செய்கிறார்.  அவ்விதம் செய்யும் போது கர்த்தருடைய நாமம் இன்னும் அதிமாக மகிமைப்படுகிறது.  

அதனைக்குறித்து சகரியா 14:16-21  

பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.

இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.

அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.

மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்ளை நாம் நன்றாக தியானிப்போமாகில் கர்த்தரை நாம் ஆராதனை செய்வதனை குறித்து கர்த்தருடைய வசனம் சொல்கிறது.  ஆனால் அபிஷேகத்தில் நிறைந்து நவமான பாஷையில் நிறைந்து, தேவனை துதித்து பாடி ஆராதித்து மகிமைப்படுத்தி, கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்.  அப்படி நாம் தேவனை ஆராதிக்கும் போது நம்முடைய உள்ளம் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே கர்த்தர் கானானியனை ஜெயிக்கும் படியாக திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

ஆனால் அங்கு அவர்கள் பலபாடுகளை அனுபவித்ததால் மனமடிவாகிறார்கள்.  ஆதலால் இதனை நாம் கிறிஸ்துவின் இரத்தத்தாலும், அவருடைய ஆவியினாலும், வசனத்தினாலும் ஜெயித்து நம் உள்ளமானது பரிசுத்த பாத்திரமாக விளங்க வேண்டும்.  இவ்விதமாக நாம் நம்முடைய உள்ளம் இரட்சிப்பின் பாத்திரமாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.