தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 9: 10

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி  சபையாகிய நாம் தேவனை முழு இருதயத்தோடு விசுவாசியாமற் போனால் நம்மை பட்சபாதம் இல்லாமல் நியாயந்தீர்க்கிறவர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய விசுவாச யாத்திரையில் உலகம், மாமிசம், பிசாசு இவற்றை நாம் நம்முடைய உள்ளத்திலிருந்து அழித்து ஜெயித்தவர்களாக இருக்கவேண்டும் என்று தியானித்தோம். மேலும் மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் போராடுகிறதினால், நாம் மாமிச கிரியைகளை அழித்தால் மட்டுமே கானானுக்குள் பிரவேசிக்க முடியும்.  அதற்காகவே தான் கிறிஸ்து அவருடைய சபையை நமக்குள் எழப்புகிறார்.  

ஆனால் அந்த காரியங்களில் மோசேயும், ஆரோனும் தவறி விட்டதை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அவர்கள் தவறி விடுவதற்கு காரணம் என்னவென்றால் உள்ளத்தில் கர்த்தரை பரிசுத்தம் பண்ணும்படி விசுவாசியாமற் போன படியினால் அவர்களை அந்த தேசத்தை சுதந்தரிக்க விடவில்லை.  அதுபோல் நாமும் விசுவாசியாமற் போனால் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை நம்மளில் எழுப்பமுடியாது.  ஆதலால் பிரியமானவர்களே நாம் தேவ சத்தம் கேட்டு கீழ்படிந்து விசுவாசிக்க வேண்டும். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 20:21-29  

இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்.

இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.

நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,

ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.

கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.

அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.

ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

மேற்க்கூறிய வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது இஸ்ரவேல் சபையை ஏதோம் வழியாக ஏதோம் ராஜா அனுப்பாததால் அவர்கள் ஓர் என்னும் மலைக்கு போனார்கள்.  அங்கு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப் பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்கு கீழ்படியாமற் போனபடியால், நான் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை என்றும், ஆரோனையும், அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களை கழற்றி அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக: ஆரோன் அங்கே மரித்து தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.  

பிரியமானவர்களே நாம் தியானிக்கும் போது, மோசே தான் கர்த்தருடைய வார்த்தையை மீறுகிறான்.  ஆனால் கர்த்தர் ஆரோனையும் சேர்த்து தண்டிக்கிறதை பார்க்கிறோம்.  அதற்கு காரணம் என்ன என்பதை சிந்திப்போம்.  ஒன்று கர்த்தர் மோசேயை அழைத்தப்போது, மோசே நான் திக்கு வாயும், மந்த நாவும் என்று சொன்னபோது கர்த்தர் மோசேக்கு வாயாக ஆரோனை அனுப்புகிறதை பார்க்கிறோம்.  இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் மோசேயை கர்த்தர் தனிமை படுத்துகிறார்.  

அது மட்டுமல்ல மோசே சீனாய் மலையில் போனப்போது, அங்கிருந்து வர தாமதம் ஆன போது இஸ்ரவேல் சபை எங்களுக்கு முன் செல்லும் தெய்வம்  வேண்டும் என்ற போது, கன்று குட்டியை உண்டாக்கினது ஆரோன்.  ஆனால் கர்த்தர் அதனை மனதிலே வைத்து அந்த நல்ல தேசத்தை சுதந்தரிக்க விடவில்லை. 

 பிரியமானவர்களே இதிலிருந்து கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்துக்காக செய்து காட்டி, அவர் பட்சபாதம் இல்லாமல் நியாயந்தீர்க்கிறவர் என்பதனை புரிந்துக்கொள்ள வேணடும்.  அல்லாமலும் கர்த்தர் சொன்னது போல் மோசே செய்து சபையார் எல்லாரும் பார்க்க ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.  

பின்பு எண்ணாகமம் 20:28,29

அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.

ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

  மேற்க்கூறிய வசனம் பிரகாரம் ஆரோன் ஓர் என்னும் மலையின் உச்சியில் மரிக்கிறான்,  இதனை அறிந்த சபையார் முப்பது நாள் துக்கம் கொண்டாடினார்கள். பிரியமானவர்களே நாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் நம் ஆத்துமாவை ஜாக்கிரைதையாக  நம் வாழ்க்கையை காத்துக்கொள்ள வேண்டும்.  

இதனை நன்றாக தியானித்து நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.